92 சவரன் திருட்டு வழக்கை முறையாக விசாரிக்காத காவல் உதவி ஆணையரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜிரினா பேகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மகள் திருமணத்திற்கு வாங்கிய 92 சவரன் நகைகள் 2018ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி திருடு போனது. இதுகுறித்து சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். வழக்கு பதிவு செய்தனர். ஆனால், நகையை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 8 ஆண்டுகளாக எனது நகையை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வழக்கை சிபிசிஐடி விசாரணை மாற்ற வேண்டும் என்று கோரினார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.முகமது சபீத், நகையை மீட்பது தொடர்பாக காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2018 செப்டம்பர் முதல் தற்போது வரை சூளைமேடு காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜாராகினர். அப்போது நீதிபதி, குற்ற வழக்கு விசாரணை தொடர்பாக முறையாக பயிற்சியை காவல்துறையினருக்கு அரசு வழங்க வேண்டும். அவ்வாறு முறையாக பயிற்சி இல்லாத, கடமையை செய்ய தவறிய காவல் அதிகாரிகளை வெளியேற்ற நீதிமன்றம் நடவடிக்கையை மேற்கொள்ளும்.
குற்றம் நடந்த காலத்திற்கு பிறகு சூளைமேட்டில் அதிக காலம் ஆய்வாளராக பணியாற்றி தற்போது சென்னை சென்ட்ரல் ரயில்வே இரும்பு பாதை உதவி ஆணையாக பணியாற்றி வரும் கர்ணன் என்பவரை டிஜிபி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். 2018 செப்டம்பர் முதல் தற்போது வரை பணியாற்றிய மற்றும் பணியாற்றும் ஆய்வாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே போன்று சேலம் மாவட்டம் வீராணம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தவணை முறையில் வீட்டுமனை வழங்குவதாக அளிக்கப்பட்ட புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆய்வாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரிய வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, 2018 முதல் தற்போது வரை வீராணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் அனைவரும் நேரில் ஆஜராகி இருந்தனர். இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, குற்ற வழக்கு பதிவு செய்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த காவல் ஆய்வாளர்கள் மீது டிஜிபி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.