*பொதுமக்கள் கோரிக்கை
அரூர் : தீர்த்தமலை பகுதியில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தின் பிரசித்த பெற்ற புண்ணிய தலமான தீர்த்தமலையில், பல்வேறு வியாதிகளை தீர்க்கவல்ல அதிசய தீர்த்தங்கள் உள்ளது. இதனால் நாடு முழுவதிலும் இருந்து, ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இங்குள்ள வடிவாம்பிகை தீர்த்தகிரீஸ்வரர் கோயில், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுபாட்டில் உள்ளது. வனப்பகுதியில், மலையின் மேல் சுமார் 2000 அடி உயரத்தில் உள்ள தீர்த்தமே கண்டுபிடிக்க முடியாத அதிசமாக உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூ, பழம், தேங்காய், பொறி கடலை ஆகியவற்றை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் கொண்டு வருகின்றனர்.
பெரும்பாலான வனப்பகுதிகள், கோயில்களில் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அதனை கடைபிடித்து வரும் நிலையில், தீர்த்தமலையில் அந்த விதிகளை கடைபிடிப்பதில்லை. இதனால் தீர்த்தமலை மலை பகுதி முழுவதும் வண்ண வண்ண பிளாஸ்டிக் பொருட்களால் நிரம்பி காணப்பட்டது. இந்த வனப்பகுதியில் அதிக அளவில் குரங்குகள், மான்கள் உள்ளிட்டவை வசித்து வருகிறது.
பக்தர்கள் வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் மான், குரங்குகள் இறந்துவிடும் சூழல் உள்ளது. அத்துடன் பச்சை பசேல் என காணப்பட்ட மலை பகுதி பிளாஸ்டிக் கவர்களால் நிலத்தடி நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள வழியோர கடைகளிலும், தீர்த்தமலையில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது.
வனத்துறை, கோயில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகையும் வைக்கவில்லை. எனவே வனத்துறையும், கோயில் நிர்வாகமும் கடும் கட்டுப்பாட்டை விதித்து பக்தர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.