சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஓமலூர் அடுத்த சாஸ்தா நகரை சேர்ந்த சித்ரா (56) புகார் மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது இளைய மகன் கோகுல்ராஜ் கடந்த 2015ல், திருச்செங்கோட்டில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தீரன் சின்னமலை பேரவையை சேர்ந்த யுவராஜ் கைதாகி, சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.
சிறையில் இருந்தவாறே அவர், அமைப்பின் பெயரை கொண்டு பல்வேறு கட்டப்பஞ்சாயத்து மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக ஆணவ படுகொலையை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறார். எனவே அவரது தீரன் சின்னமலை பேரவை என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும். இவ்வாறு சித்ரா தெரிவித்தார்.