தியேட்டருக்கு வரும் முன்பே சர்வர் மூலம் ஹேக் செய்து துணிகரம் 1,050 சினிமா பிரிண்ட்களை திருடி ரூ.22,400 கோடிக்கு விற்பனை: 5 பேர் கொண்ட கும்பல் கைது; பகீர் தகவல்கள்
திருமலை: ஐதராபாத் காவல்துறை ஆணையர் சி.வி.ஆனந்த், திரைப்பட மேம்பாட்டு தலைவர் தில்ராஜு, நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், நானி மற்றும் சினிமா வர்த்தக சபை பிரதிநிதிகள் கூட்டாக இணைந்து நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாட்னாவை சேர்ந்தவர் அஸ்வின்குமார். இவர் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆன்லைனில் ஹேக்கிங் செய்ய கற்றுக்கொண்டு சினிமா திருட்டில் ஈடுபட்டார். சினிமா தயாரிப்பாளர்கள் சில டிஜிட்டல் மீடியா நிறுவனங்களுக்கு படத்தை விற்பது வழக்கம்.
இந்த நிறுவனங்கள் அதை தங்கள் சர்வர்களில் சேமித்து, உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளுக்கு செயற்கைக்கோள் மூலம் அனுப்புகின்றனர். அத்தகைய நிறுவனங்களை அஸ்வின்குமார் உள்ளிட்ட சிலர் கண்காணித்து சர்வர்களை ஹேக் செய்து திரைக்கு வரும் முன்பே சினிமா பிரிண்ட்டுகளை திருடி வந்துள்ளனர். திருட்டு படங்களை சந்தைப்படுத்த அஸ்வின்குமார் பல்வேறு டெலிகிராம் சேனல் நிர்வாகிகளுடனும், கேமிங் மற்றும் பந்தய வலைத்தளங்களுடனும் ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
இதற்காக அவர்களிடமிருந்து ஒரு படத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை வசூலித்து வந்தார். நேரடியாக சர்வர்களில் இருந்து புதிய சினிமாக்களை திருடி வந்ததால், அவை அனைத்தும் எச்.டி.பிரிண்டில் அவருக்கு கிடைத்துள்ளது. இவருக்கு கிடைத்த நிதி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, கிரிப்டோ கரன்சியாக கிடைத்துள்ளது. இதற்கு அஷ்மத்சிங் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இதேபோன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த சிரில் இன்பேன்ட் ராஜ் என்கிற அமல்தாஸ், கேம்கார்டர் மூலம் படங்களை பதிவு செய்து திரையரங்குகளில் படங்களை பதிவு செய்து திருடி வந்தார். இதற்காக, வனஸ்தலிபுரத்தை சேர்ந்த ஜனகிரண்குமார், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதாகரன் மற்றும் கோவாவை சேர்ந்த அர்சலஸ் அகமது ஆகியோருடன் ஒரு கும்பலை உருவாக்கினார். இந்த கும்பல் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் பல்வேறு மொழி படங்கள் என 1050 படங்களை திருடி விற்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் திரைப்படத்துறைக்கு ரூ.22,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக அஸ்வின்குமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.