கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அருகே தொடர் மழையால் 5 விவசாய கிணற்றின் சுவர்கள் இடிந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே, குடியிருப்புகள், சாலைகள், அரசு கட்டிடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் நீர்நிலைகள், விவசாய கிணறுகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. நீர்நிலைகளையும், வெள்ளம் புகுந்த பகுதிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக கே.வி.குப்பம் தாலுகாவில் தண்ணீர் முழுவதும் நிரம்பியிருந்த 5 விவசாய கிணறுகளின் சுவர்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தது.
நேற்று முன்தினம் சென்னங்குப்பத்தை சேர்ந்த தசரதன் விவசாய கிணறும், நேற்று வடுகந்தாங்கல் உத்திரகுமார் என்பவரின் கிணறு, வேலம்பட்டில் கங்காதரன் என்பவரின் கிணறு என மொத்தம் 5க்கும் மேற்பட்ட விவசாய கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தது. மேலும் மின்மோட்டாரும் கிணற்றில் மூழ்கியது. சுமார் 100 அடிக்கு மேல் ஆழம் உள்ள கிணற்றில் மின்மோட்டார் பைப்புகளை மீட்க முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்துறை, தோட்டக்கலைத்துறையினர் விவசாய கிணறுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பான அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்ததற்கு இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
