உச்சிப்புளி அருகே மின்சாரம் துண்டிப்பால் பாதி வழியில் நின்ற ரயில்: மேலும் 2 ரயில்கள் நடுவழியில் நின்றன
மண்டபம்: உச்சிபுளி அருகே, மின்சாரம் துண்டிப்பால் சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் பாதி வழியில் நின்று தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால், மதுரை-ராமேஸ்வரம், திருச்சி-ராமேஸ்வரம் ரயில்களும் பாதி வழியில் நின்று தாமதாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், உச்சிபுளி அருகே, இந்திய விமானப் படைக்கு சொந்தமான பருந்து விமானத்தளம் உள்ளது. இதன் அருகே ரமேஸ்வரத்திற்கு செல்லும் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை செல்கிறது. விமானத்தளத்தின் பாதுகாப்பு கருதி இந்த பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்படவில்லை. மாறாக பூமிக்குள் மின்கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி வழியாக ரயில்கள் கடக்கும்போது, குறைந்த வேகத்தில் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு வந்த (போட்மெயில்) விரைவு ரயில் (16751) காலை 7.30 மணியளவில் பருந்து விமானத்தளம் பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது மின்கேபிள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மின்கம்பத்திற்கு செல்லும் இணைப்பு, ரயில் இன்ஜினின் பாண்ட் கிராப்ட் மோதி மின்சாரம் தடைபட்டது. இதனால், இன்ஜினுக்கு போதிய மின்சாரம் கிடைக்காமல் ரயில் பாதி வழியில் நின்றது. பின்னர் மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டு சுமார் 2.30 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. சென்னை-ராமேஸ்வரம் ரயில் பாதி வழியில் நின்றதால், இன்று காலை மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பயணிகள் ரயில் (56711) பரமக்குடியில் நிறுத்தப்பட்டு, பின்னர் 10.15 மணியளவில் புறப்பட்டு சென்றது.
இதேபோல, திருச்சி-ராமேஸ்வரம் ரயில் மானாமதுரையில் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றது. இவ்வாறு 3 ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றதால், பயணிகள் அவதிப்பட்டனர். மேலும், ராமேஸ்வரத்திலிருந்து பகல் 12 மணியளவில் மதுரைக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.