தெருவோரத்தில் பிச்சையெடுத்து சேர்த்த ரூ.1.83 லட்சத்தை கோயிலுக்கு வாரி வழங்கிய மூதாட்டி: கர்நாடகாவில் நெகிழ்ச்சி
ராய்சூர்: கடந்த ஆறு ஆண்டுகளாகப் பிச்சையெடுத்துச் சேமித்த 1.83 லட்சம் ரூபாயை, கோயில் திருப்பணிக்காக வழங்கி ராய்சூர் பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த மூதாட்டி. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ரங்கம்மா (75) மூதாட்டி, கடந்த 35 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம், ராய்சூர் மாவட்டம், பிஜநகெரா பகுதியில் வசித்து வருகிறார். தினமும் யாசகம் (பிச்சையெடுத்தல்) பெற்று வாழ்க்கை நடத்தி வந்த இவர், சாலையோரத்திலேயே படுத்து உறங்கி வந்துள்ளார். யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை எல்லாம் கோணிப்பைகளில் கட்டிச் சேமித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சமீபத்தில், அப்பகுதி மக்கள் அவருக்குச் சிறிய வீடு ஒன்றைக் கட்டிக் கொடுக்க உதவியுள்ளனர். அதற்கான செலவுத்தொகையான ஒரு லட்சம் ரூபாயை ரங்கம்மா தனது சேமிப்பிலிருந்து கொடுத்தார். அப்போதுதான், அவரிடம் மூன்று கோணிப்பைகள் நிறைய பணம் இருப்பது அப்பகுதி மக்களுக்குத் தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, அந்தப் பணத்தை ஆஞ்சநேய சுவாமி கோயிலின் திருப்பணிக்காகச் சேமித்து வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்தனர். அதில் பெரும்பாலும் நாணயங்களே இருந்ததால், 20 பேர் சேர்ந்து சுமார் ஆறு மணி நேரம் கணக்கிட்டனர்.
மொத்தமாக 1.83 லட்சம் ரூபாய் இருந்தது. அதனுடன் இருந்த 6,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் சேதமடைந்திருந்தன. மீதமிருந்த 1.83 லட்சம் ரூபாயையும், சமீபத்தில் தனியார் வசமிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட ஆஞ்சநேயர் கோயிலின் புனரமைப்புப் பணிகளுக்காக அவர் நன்கொடையாக வழங்கினார். ரங்கம்மாவின் இந்த உன்னதமான செயலைப் பாராட்டி, கோயில் நிர்வாகிகள் அவருக்கு மரியாதை செய்தனர்.