Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வயதைக் குறைத்து காட்டிப் பழகியதால் 52 வயது காதலியை கொன்ற 26 வயது காதலன்: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

மெயின்புரி: உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக் பழகிய 52 வயதுப் பெண், திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 26 வயது இளைஞர் அவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். அவரது கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஃபரூக்காபாத்தைச் சேர்ந்த 52 வயதுப் பெண் என்பதும், நான்கு பிள்ளைகளின் தாய் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அருண் ராஜ்புத் (26) என்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘26 வயதான ராஜ்புத்தும், 52 வயதான அந்தப் பெண்ணும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். அந்தப் பெண், இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக் கொண்டுள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தொலைப்பேசி எண்களைப் பரிமாறி, அடிக்கடி பேசியதோடு, நேரில் சந்தித்தும் வந்துள்ளனர். அப்போதுதான் அந்தப் பெண்ணின் உண்மையான வயது இளைஞருக்குத் தெரியவந்துள்ளது. மேலும், அந்தப் பெண் இளைஞருக்கு சுமார் ரூ. 1.5 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆக. 11ம் தேதி அந்தப் பெண், இளைஞரைச் சந்திப்பதற்காக ஃபரூக்காபாத்தில் இருந்து மெயின்புரிக்கு வந்துள்ளார். அப்போது, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறும், கொடுத்த கடனைத் திருப்பித் தருமாறும் அருண் ராஜ்புத்திடம் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அருண் ராஜ்புத், அந்தப் பெண் அணிந்திருந்த துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரது செல்போனை எடுத்துக்கொண்டு சிம் கார்டை அப்புறப்படுத்தியுள்ளார். ெதாடர் விசாரணையில், அருண் ராஜ்புத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். திருமணம் செய்ய வற்புறுத்தியதும், கடனைத் திருப்பிக் கேட்டதும், தன்னை வயதைக் குறைத்துக் காட்டி ஏமாற்றியதுமே கொலைக்குக் காரணம் என்று அருண் ராஜ்புத் வாக்குமூலம் அளித்துள்ளார்’ என்று கூறினர்.