Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று ‘தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நடைபெற்றது. இதில், சர்வ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் காட்சி அளித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதில், சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் அலங்காரங்கள் தினசரி இடம் பெற்று வருகின்றன. இதன்படி, 4ம் நாளான இன்று காலை ‘தருமிக்கு பொற்கிழி அளித்தல் லீலை’ நிகழ்வு நடந்தது. இந்த அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் காட்சி அளித்தனர். இது குறித்து பட்டர்கள் கூறுகையில், ‘மதுரை மன்னன் வங்கிய சூடாமணி பாண்டியன், இறைவனுக்கு பூஜை செய்ய நறுமணம் மிக்க செண்பக மரங்களை நந்தவனத்தில் வளர்த்து வந்தார். அதன் அருகே அரசி ஒருநாள் இருக்கும்போது, புதிய வாசனையை உணர்ந்தார்.

அப்போது பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதோ என சந்தேகம் கொண்டார். இந்த ஐயத்தை நீக்குபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு கொடுப்பதாக அறிவித்தார். இதையறிந்த தருமி என்ற ஆதிசைவ பிரம்மச்சாரி, அந்த பரிசு தனக்கு கிடைத்தால், அப்பொருளை கொண்டு மணம் முடித்து இறைபணி செய்யலாம் என இறைவனிடம் வேண்டினார். இறைவனும் அந்த தருமிக்கு ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ, பயிலியது கெழிஇய நட்பின் பயிலியற், செறியெயிற் றரிவை கூந்தலில், நறியவு முளதோ நீ அறியும் பூவே’ என்ற பாடல் எழுதப்பட்ட ஓலையை வழங்கினார். தருமி அரசவைக்கு சென்று பாடலை படித்து காட்டினார். அரசனும் தன் சந்தேகம் தீர்ந்ததாகக் கூறி ஆயிரம் பொற்காசுகளை தருமிக்கு அளிக்க உத்தரவிட்டார். அப்போது நக்கீரர் எழுந்து பாட்டில் பிழையுள்ளது என பரிசை கொடுக்க விடாமல் தடுத்தார்.

இதையடுத்து தருமி இறைவனிடம் சென்று, உங்களது பாட்டில் பிழையுள்ளது என சபையில் கூறியதாக புலம்பினார். இறைவன் ஒரு புலவர் வடிவத்தில் அரசவைக்கு வந்து தன் பாடலில் என்ன குற்றம் கண்டீர் என கேட்டார். அப்போது நக்கீரர் எழுந்து பாடலில் பொருட்குற்றம் உள்ளது என்றார். இருவருக்கும் வாதம் தொடர, இறைவன் தன் நெற்றி கண்ணைத் திறக்க, இறைவனே வந்திருக்கிறார் என அறிந்த பின்னரும் நக்கீரர் குற்றம் குற்றமே என்று வாதாடினார். இதனால், இறைவன் தன் நெற்றி கண்ணை திறக்க, அதன் வெப்பம் தாளாமல் நக்கீரர் பொற்றாமரைக்குளத்தில் விழுந்தார். இறைவனும் அங்கிருந்து மறைந்தார். இவ்வாறு நக்கீரரின் தமிழ்ப் புலமையை உலகுக்கு உணர்த்திய இறைவன், மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி பொற்றாமரைக்குளத்தில் இருந்து நக்கீரரை உயிர்ப்பித்துக் கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியைத் தருமிக்கே கொடுக்கும்படி செய்தார்’ என்றனர். ஆவணி மூலத்திருவிழாவில் நாளை உலவாக் கோட்டை அருளிய லீலை அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கிறார்.