Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல், கட்டுமான அனுமதி ரத்து செய்ய வேண்டும்: அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்

சென்னை: பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் கட்டுமான அனுமதி ரத்து செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது: சென்னை பெரும்பாக்கத்தில் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப்பகுதியில் சட்டத்தை மீறி பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு 1250மடங்கு குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான திட்ட அனுமதியை வழங்கி அந்த பகுதியில் மேலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வழிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருநகர கட்டுமான குழுமம் துறையும் செய்துள்ளது. இந்த பற்றிய புகார் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்பு துறை, முதலமைச்சர், தலைமை செயலாளர், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை என பத்து சம்பந்தப்பட்ட துறை பொது ஊழியர்களுக்கு புகார் அனுப்பியுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போன்ற ஈர நிலங்களை பாதுகாப்பதற்காக அரசுகளுக்கு இடையே போடப்படும் ஒப்பந்தம் தான் ராம்சார் ஒப்பந்தம். இதன்படி 2022ல் ஏப்ரல் 8ம் தேதி 1247.5 ஹெக்டர் அதாவது 3,080 ஏக்கர் அளவிற்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. இதன் பொருள் என்னவென்றால் 1,247 ஹெக்டரில் ஏற்கனவே கிட்டத்தட்ட 690.65 ஹெக்டர் (1705 ஏக்கர்) நம் வனத்துறையிடம் காப்புக் காடாக உள்ளது. மீதமுள்ள 547 ஹெக்டரில் (1375 ஏக்கர்) உள்ள அரசு மற்றும் தனியார் பெயரில் உள்ள நிலங்களை மீட்டெடுப்பது அரசின் முக்கிய கடமை. மேலும் இந்திய அரசின் 2017 ஈரநிலம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்ட விதிகளின்படி ராம்சார் நிலங்கள் நிர்வகிக்கப் பட வேண்டும். ஆனால் இந்த ராம்சார் பகுதிக்கு உட்பட்ட சர்வே எண்கள் 453, 495, 496, 497, 498 இல் உள்ள கிட்டத்தட்ட 14.7 ஏக்கர் நிலத்தில் 1250 அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்காக பிரிகேட் மார்கன் என்னும் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதியும் கட்டுமான அனுமதியும் கோரியது.

கடந்த 2022 ஜூலையில், அதாவது ராம்சாரில் இந்த நிலம் ஏப்ரல் 2022ல் பதிவிடப்பட்ட பிறகு, பிரிகேட் என்டர்பிரைசஸ் லிமிடட் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்பாக கோரப்படும் குறிப்பு விதிமுறைகள் அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையதத்திற்கு விண்ணப்பம் செய்கிறது. அதனை தொடர்ந்து பள்ளிக்கரணை ராம்சார் நிலத்திற்கு அருகிலிருந்து 65 மீட்டர் தொலைவில் உள்ளதாக கூறிய அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி நடந்த 517வது சந்திப்பில் மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்கு சுற்றுசூழல் அனுமதிக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. ஜனவரி 20, 2025 அன்று மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தை மார்கன் பிரிகேட் நிறுவனத்திடம் கொடுத்துவிடுகிறது. மின்னல் வேகத்தில் பெருநகர சென்னை வளர்ச்சிக்குழுமம் என்று சொல்லப்படும் சிஎம்டிஏ சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த மூன்றே நாளில் கட்டுமான அனுமதியை கொடுக்கிறது. இவ்வாறு அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.