சீதாப்பழம் பறிக்கலாம் என வனப்பகுதிக்கு அழைத்து சென்று காதல் மனைவியை குத்திக்கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்: நடத்தை தகராறில் பயங்கரம்
திருமலை: தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம், லிங்கால் மண்டலம் ராயவரம் கிராமத்தை சேர்ந்தவர் சைலம் (32). இவருக்கும் மஹபூப் நகர் மாவட்டம், தேவரகட்டு மண்டலம் கோடூரை சேர்ந்த ஸ்ராவணி (27) என்பவருக்கும் ‘ராங்கால்’ மூலம் செல்போனில் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் காதலர்களாக மாறியுள்ளனர். பின்னர் இருவரும் 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் ஸ்ராவணிக்கு தனது அக்காவின் கணவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இதையறிந்த சைலம், அவரை கண்டித்து வந்துள்ளார். இதனால், கணவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, ஸ்ராவணி தனது அக்காவின் கணவருடன் சென்று விட்டாராம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மீண்டும் கணவனிடம் திரும்பி வந்தபோது, சைலம் ஸ்ராவணியை மனைவியாக ஏற்றுக்கொண்டாராம்.
இந்நிலையில் குடிபழக்கத்துக்கு ஆளான சைலம், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வாராம். இதற்கிடையே ஸ்ராவணி அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசுவதையும், சாட்டிங் செய்வதையும் கவனித்த சைலம், அவரை கண்டித்துள்ளார். இதனால், 4 மாதங்களுக்கு முன்பு ஸ்ராவணி, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். அங்கிருந்தபடி மஹபூப் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, குழந்தைகளையும் கவனித்து வந்துள்ளார். மனைவியின் நடத்தையால் கடும் கோபத்தில் இருந்த சைலம், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 21ம் தேதி சைலம் மஹபூப் நகருக்கு சென்றுள்ளார். அன்றிரவு மனைவிக்கு போன் செய்து, ‘தான் மாறிவிட்டதாகவும், இனி சண்டையிட மாட்டேன் என்றும், காலையில் சோமசிலாவிற்கு செல்வோம்’ என்றும் கூறினார்.
இதனை நம்பிய ஸ்ராவணி, தனது இரு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, சைலத்துடன் சோமசிலாவிற்கு பைக்கில் சென்றார். கொத்தபள்ளி மண்டலத்தில் உள்ள சாதாபூருக்கு வந்தபோது சைலம், ‘சீதாப்பழங்களை சேகரித்து வரலாம்’ எனக்கூறி அங்கிருந்த வனப்பகுதிக்கு ஸ்ராவணியை அழைத்து சென்றுள்ளார். அங்கு, ஸ்ராவணி கழுத்தில் துப்பட்டாவை சுற்றி நெரித்துள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் ஸ்ராவணியின் சடலத்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இதற்கிடையே ஸ்ராவணியின் தந்தை சந்திரய்யா, ‘தனது மகளை காணவில்லை’ என்று மஹபூப் நகர் 2வது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், கடைசியாக சைலத்துடன் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார், நேற்று முன்தினம் அவரை பிடித்து விசாரித்தபோது ஸ்ராவணியை கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் ஸ்ராவணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சைலத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.