அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞரணி மாநில செயலாளராக இருப்பவர் சிவபதி. முன்னாள் அமைச்சரான இவர் கடந்த மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர். இவர் எடப்பாடியை மாமா என்றும், அவர் இவரை மாப்பிள்ளை என்றும் பாசத்தோடு அழைத்துக்கொள்வார்கள். இந்த முறை பெரம்பலூரில் போட்டியிட, எடப்பாடி தரப்பில் இருந்து சிவபதியிடம் பேசினார்களாம்.
ஆனால் அவர் நான் சட்டமன்ற தேர்தலில் நின்று கொள்கிறேன் என கூறி விட்டாராம். அதேபோல் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் எம்பி மருதராஜ் ஆகியோரும் நழுவி விட்டார்களாம். இதனால் பெரம்பலூருக்கு பிரபலமான வேட்பாளர் கிடைக்காமல் அதிமுக அல்லாடி வருவதாக கூறப்படுகிறது.இதுபற்றி பெரம்பலூர் அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘பெரம்பலூர் தொகுதியில் சீட் கேட்டு 30க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடி பழனிசாமி பெயரில் பணம் கட்டி உள்ளனர். சிவபதியும் எடப்பாடி பெயரில் தான் விருப்ப மனு கொடுத்துள்ளார். கடந்த முறை 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றதும், அதிமுக பிளவு பட்டிருப்பதுமே முக்கிய நிர்வாகிகள் போட்டியில் இருந்து ஒதுங்க காரணம். இதனால் இந்த முறை சாதாரண நபரையே தேர்தலில் நிறுத்த வேண்டிய நிலை கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது’ என்று சோகத்துடன் கூறினர்.