Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குன்னூரில் 65வது பழக்கண்காட்சி துவங்கியது: திராட்சை, ஸ்ட்ராபெரி பழங்களால் பிரமாண்ட கேக் உருவம்

குன்னூர்: கோடை சீசனை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை சார்பில் கண்காட்சிகள் நடத்தப்பட்ட வருகிறது. ஏற்கனவே கோத்தகிரியில் கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் காய்கறி கண்காட்சி நடந்து முடிந்தது. அதன் பின்பு கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் ஊட்டியில் ரோஜா கண்காட்சி என பல்வேறு கண்காட்சிகள் நிறைவடைந்து நிலையில் தற்போது ஊட்டியில் மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து குன்னூர் சிம்ஸ்பூங்காவில் இன்று 65வது பழக்கண்காட்சி இன்று காலை துவங்கியது. வருகிற 26ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.

இதன் துவக்க விழா இன்று காலை நடந்தது. நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார். கண்காட்சியை அரசு கொறடா ராமச்சந்திரன் துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியையொட்டி பூங்காவில் 4 டன்களில் பல்வேறு வகையான பழங்களை கொண்டு பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் நுழைவு வாயிலில் எலுமிச்சை பழங்களால் ஆன பிரமாண்ட எலுமிச்சை பழ உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் கடற்கரையில் பொழுது போக்கும் விதமாக பழங்களால் ஆன தென்னை மரத்துடன் கூடிய ஊஞ்சல், ஆரஞ்சு பழங்களால் வடிவமைக்கப்பட்ட பழச்சாறு குவளை, செர்ரி பழங்களால் ஆன விசில், திராட்சை, ஸ்ட்ராபெரி பழங்களால் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட கேக், ஐஸ் க்ரீம் உள்பட பல்வேறு பழவகைகளை கொண்டு பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.முதல் நாளான இன்று கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

ஏற்காடு

ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்காட்டில் நடப்பாண்டு 48வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை 7 நாட்களுக்கு நடக்கிறது. கோடை விழாவின் துவக்க விழா இன்று மாலை 4 மணிக்கு ஏற்காடு கலையரங்கில் நடக்கிறது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராஜகண்ணப்பன், ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று கோடை விழா மலர் கண்காட்சியை துவக்கி வைக்கின்றனர். இக்கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத்துறை சார்பில் அண்ணாபூங்காவில் 1.50 லட்சம் மலர்களை கொண்டு மலர்க்காட்சி, பழ கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்

ளது.இதில், வன விலங்குகளை பாதுகாத்து, வனத்தை பாதுகாப்போம் என்ற உணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யானை, காட்டுமாடு, குதிரை, முதலை, முயல் உள்ளிட்ட வன விலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை, மிக்கிமவுஸ் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் அண்ணா பூங்கா வளாகத்தில் 25,000க்கும் மேற்பட்ட வண்ணமலர் தொட்டிகளை கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்து இயற்கை அழகை ரசித்து செல்வர். விடுமுறை மற்றும் சீசன் காலங்களில் கூட்டம் களைகட்டும். நகரில் பிரையண்ட் பூங்கா, பைன் மரக்காடுகள், தூண் பாறை, மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி வனப்பகுதி, நட்சத்திர ஏரி, ஹோக்கர்ஸ் வாக் உள்ளிட்டவை முக்கிய சுற்றுலா இடங்களாகும். இந்நிலையில், நகரில் உள்ள பிரையண்ட் பூங்காவில் நாளை 62வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்குகிறது. இவை 9 தினங்கள் நடைபெறும்.