சென்னை: ‘‘உலகப் பொதுமறை திருக்குறள்” நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் “உலகப் பொதுமறை திருக்குறள்” என்னும் நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்நூலினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ், சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் சேர்ந்து கூட்டு வெளியீடாக வெளியிடுகிறது. இத்திருக்குறள் நூல், எளிதில் வாசிப்பதற்கேற்ற விதத்தில் சீர் பிரிக்கப்பட்ட வடிவத்துடன் தமிழண்ணல் எழுதிய நுண்பொருள் விளக்கவுரை, பி.எஸ்.சுந்தரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஓவியர் மணியம் செல்வத்தின் ஓவியம் என இருமொழிப்பதிப்பாக அமைந்துள்ளது.
திருக்குறளைப் பயில விரும்பும் வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள், மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு இந்நூல் பெரிதும் பயன்தரும். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், செயலாளர் சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.