இளைய தலைமுறை அறிய வேண்டியது அவசியம்; சுதந்திர போராட்டத்தில் புரட்சி முழக்கமான கைத்தறிகளின் ஓசை: மூத்த நெசவாளர்கள் பெருமிதம்
சிறப்பு செய்தி
நவீனங்களில் உச்சத்தை நாடு தொட்டாலும் மனிதர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான அடிப்படைகள் மூன்று. உண்ண உணவு, உடுப்பதற்கு உடை, வசிப்பதற்கு இருப்பிடம் என்ற மூன்றையும் முதல் இலக்காக கொண்டே ஒவ்வொரு மனிதனின் ஓட்டமும் உள்ளது. இதில் உணவு தரும் விவசாயம் என்பது இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிறது. இதற்கடுத்து மிகவும் முக்கியமானது உடை. இந்த உடைகள் என்பதை உருவாக்கி தருவது நெசவு. இதற்கு அடித்தளம் அமைத்து மனிதனை முழுமை ெபறச்செய்த பெருமைக்குரியது கைத்தறிகள்.
தங்கள் உடல் உழைப்பினால் நெசவாளர்கள் உருவாக்கும் தூய கைத்தறி ஆடைகளுக்கு, எந்தவித நவீன ஆடைகளும் நிகராகாது. கோடையின் வெப்பத்திலிருந்து நம் உடலை பெருமளவில் பாதுகாக்க உதவுவது கைத்தறி ஆடைகள் தான். கோடைக்காலம் மட்டுமின்றி எல்லா காலங்களிலும் அணிய ஏற்றவையும் கைத்தறி ஆடைகள் தான் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் கைத்தறி நெசவுத்தொழில் அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளது.
கொங்கு மண்டலங்களான கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் கைத்தறிகள் பிரதானமாக உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து கைத்தறி மூலம் உருவாகும் ஆடைகள் வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட கைத்தறிகளின் பாரம்பரியத்தை போற்றவும், நெசவாளர்களை சிறப்பிக்கவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றிலும் கைத்தறியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர் கைத்தறி சார்ந்த ஆய்வாளர்கள்.
இதுகுறித்து கைத்தறி நெசவாளர் சங்கங்களை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
நாட்டின் பாரம்பரியமான கைத்தறி நெசவுத் தொழிலையும் அதனை நம்பி வாழும் தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்கவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி இந்தியாவில் “தேசிய கைத்தறி தினம்” கடைபிடிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி போன்ற தலைவர்களால் துவங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் கொள்கை உள்நாட்டு தொழில்களை ஆதரித்து அதன் உற்பத்தி பொருட்களை மட்டுமே மக்கள் வாங்கி பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாகும்.
சுதந்திர போராட்ட காலத்தில் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்பட்ட ஜவுளித் துணிகளை புறக்கணித்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று மக்களிடம் தலைவர்கள் அறிவுறுத்தினர். இதை நோக்கமாக கொண்டு சுதந்திரப் புரட்சிக்கு அடித்தளமானது சுதேசி இயக்கம். 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சுதேசி இயக்கம் உருவான நாளை நினைவு கூறும் வகையில் தேசிய கைத்தறி தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் பெற்று 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரதமர் ஜவஹர்லால் நேரு, கையால் தயாரிக்கப்பட்ட காதி தேசியக்கொடியை ஏற்றினார். இது கைத்தறியின் பெருமையை உலகுக்கே உணர்த்திய ஒரு பெரும் நிகழ்வாக போற்றப்படுகிறது.
இது மட்டுமின்றி கைத்தறியில் நெய்யப்பட்ட கதர் துணிகளை அணிந்தவர்களே அன்றைய நாளில் தேசபக்தர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர். அவர்களை குறிவைத்தே பிரிட்டீஷ் அரசின் தாக்குதல்களும் நடந்தது. ஆனால் அவர்கள், கதர் மீதான தங்களது பற்றை எந்தச்சூழலிலும் மாற்றிக்கொள்ளவில்லை. பல நெசவாளர்கள் மக்கள் மனம் நிறைந்த சுதந்திரப்போராட்ட வீரர்களாகவும் மாறினர். சுதந்திர போராட்டத்தில் தடியடி பட்டு உயிர்நீத்த திருப்பூர் குமரன் போன்ற தியாகிகள் இதற்கான சாட்சிகள். இந்த வகையில் கைத்தறிகளின் ஓசை, அந்த காலத்தின் புரட்சியின் முழக்கமாகவும் மாறி, பிரிட்டீஷாருக்கு பெரும் தலைவலியை கொடுத்தது. இன்றைய தலைமுறை இதை உணர்ந்து கைத்தறி துணிகளை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
கடல் கடந்தும் நடந்த வணிகம்
நெசவாளர்களும் துணிவணிகர்களும் (கி.பி 1502-1793) எனும் ஆங்கில நூலின் தமிழாக்கம், கைத்தறி துணிகளின் கடல் கடந்த வணிகப்பெருமையை பறைசாற்றுகிறது. இந்த நூலில் குறிப்பாக கி.பி. 1502-1641 ஆண்டுகளில் தமிழக கடற்கரைப் பகுதிகளிலிருந்து மலேயக்குடா, இந்தோனேசிய தீவுக்கூட்டப் பகுதிகளில் நமது முன்னோர் நடத்திய துணி வணிகம் இடம் ெபற்றுள்ளது. 1527ம் ஆண்டு செப்டம்பர் 10ம் நாள் போர்த்துக்கீசிய அரசருக்கு எழுதிய கடிதத்தில் தமிழில் கையொப்பம் இடப்பட்டுள்ளது. மேலும் 16-18ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துணிகள் தென்னிந்தியப் பகுதிகளிலிருந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரசு, கோயில் நிர்வாகங்களின் ஊக்கத்தினால் நெசவுத்தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்தது. கைத்தறி துணி வணிகம் வலிமைபெற்று உள்நாட்டிலும், கடல் கடந்து வெளிநாடுகளிலும் கவனம் ஈர்த்து பெரும் பொருள் ஈட்டியது என்பதையும் இந்த நூல் தெளிவு படுத்தியுள்ளது.
மறுசீராய்வு அவசியமாகும்
“விசைத்தறிகளின் ஆதிக்கம் பெருகிவிட்ட காரணத்தினால் உண்மையான கைத்தறியின் விலை அதிகமாகிவிட்டது. எனவே, அதை விரும்புபவர்கள் குறைந்து வருகிறார்கள். அசல் கைத்தறிகளின் இடையில் போலியாக விற்பனை செய்யப்படும் தரமற்ற ஆடைகளும் இருப்பது இன்னொரு காரணமாகிறது. மக்கள் இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைகிறார்கள். பெரிய பெரிய ஜவுளிக்கடைகளில் விசைத்தறி ரகங்கள், கைத்தறி ரகங்கள் என இரு பிரிவுகளை ஏற்படுத்தினால், மக்கள் இது போன்ற போலிகளை வாங்காமல் தவிர்க்க முடியும். குறிப்பாக எது கைத்தறி என்பதை கண்டறிவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் ரக ஒதுக்கீடு சட்டத்தை இன்றைய காலத்திற்கேற்ப மறுசீராய்வு செய்வது அவசியமாகிறது,’’ என்பதும் மூத்த நெசவாளர்களின் குமுறல்.