சென்னை: தமிழ்நாடு தொடங்கி காஷ்மீர் வரை ஒன்றிய பாஜ அரசானது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளைத் திட்டமிட்டுப் பறிக்கிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
ஜம்மு காஷ்மீரின் மாநிலத் தகுதி மீண்டும் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இன்று அரங்கேறியுள்ள நிகழ்வுகள் அங்கே எந்தளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது என்பதன் கொடூர நினைவூட்டலாக அமைந்துள்ளன. மக்களால் தேர்த்தெடுக்கப்பட்ட முதல்வரான உமர் அப்துல்லா 1931ம் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்த விரும்பினார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, சுவர் ஏறிக் குதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை இப்படியா நடத்துவது?. இது ஏதோ ஒரு மாநிலம் அல்லது ஒரு தலைவரைப் பற்றியது மட்டும் என்று பார்க்க முடியாது.
தமிழ்நாடு தொடங்கி காஷ்மீர் வரை ஒன்றிய பாஜ அரசானது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளைத் திட்டமிட்டுப் பறிக்கிறது. இன்று காஷ்மீரில் நடப்பது எங்கு வேண்டுமானாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தத் தலைவருக்கும் நடக்கலாம். அனைத்து ஜனநாயகக் குரல்களும் இதனை ஓரணியில் கண்டித்தாக வேண்டும்.