Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு 4 பேர் போட்டி; தூத்துக்குடி தவெகவில் வெடிக்கும் கோஷ்டி மோதல்: ஸ்ரீவை. தொகுதிக்கு குறி, போஸ்டர்களால் பரபரப்பு

ஸ்ரீவைகுண்டம்: வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்த நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, நிர்வாகிகளை நியமிப்பது என பல கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இருப்பினும் பலத்த போட்டி மற்றும் கோஷ்டி பூசல் காரணமாக தூத்துக்குடி தெற்கு மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு செயலாளரை நியமிக்க முடியவில்லை. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு தூத்துக்குடியை சேர்ந்த ஆக்னல் என்ற பெண்ணும், அதே ஊரை சேர்ந்த தொழிலதிபர் ஜேகேஆர் முருகன், தூத்துக்குடியில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஏரலை சேர்ந்த சரவணன், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின் ஆகியோர் குறி வைத்துள்ளனர். இவர்களில் ஆக்னல், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். மற்ற 3 பேரும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை குறி வைத்துள்ளனர்.

பொதுவாக ஒரு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை அந்தந்த மாவட்ட செயலாளருடன் கலந்து பேசி தலைவர்கள் அறிவிப்பது வழக்கம். ஜெயலலிதா மட்டும் தான் மாவட்ட செயலாளரின் பரிந்துரையை மீறி தாங்கள் நினைக்கும் வேட்பாளரை நிறுத்துவது வழக்கம்.

இந்நிலையில் தவெக.வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு நாம் நியமனம் செய்யப்பட்டால், சுலபமாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்று விடலாமே என்று ஜேகேஆர் முருகன், சரவணன், டேவிட் செல்வின் ஆகியோர் காய் நகர்த்தி வருகின்றனர். தங்களை தவிர வேறு யாரும் நியமிக்கப்பட்டால் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட அவரது சிபாரிசை பெற வேண்டியிருக்குமே என்று யோசிக்கின்றனர். இதனால் 3 பேரும் ஸ்ரீவைகுண்டத்தில் கோஷ்டி அரசியல் செய்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தொழிலதிபர் ஜேகேஆர் முருகனுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘எங்கள் உயிர் தளபதியை தோற்கடிக்க தூத்துக்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் குழப்ப அரசியல் செய்து வரும் ஜேகேஆர் முருகனே வெளியேறு!. வெளியேறு!!. ஸ்ரீவைகுண்டம் தொகுதியை விட்டு வெளியேறு.... ரசிகர்களுக்குள் குழப்பத்தை உண்டாக்கி, எங்கள் உயிர் தளபதியை தோற்கடிக்க நினைக்கும் உன் எண்ணம் மட்டும் இல்லை. எவன் எண்ணமும் நிறைவேறாது, உயிர் ரசிகர்கள் நாங்கள் இருக்கும் வரை.... இவண், உயிரின் மேலான தளபதியின் ரசிகர்கள், ஸ்ரீவைகுண்டம் தொகுதி’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.