Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாட்டு மக்களுக்கு மின்சாரமோ, குடிநீர் வசதியோ இல்லாத நிலையில் 15 மனைவிகள், 30 குழந்தைகளுடன் அபுதாபி சென்ற `கவலையில்லா’ மன்னன்: சர்ச்சை வீடியோ மீண்டும் வைரல்

அபுதாபி: ஆப்பிரிக்க நாடான எஸ்வதினியின் மன்னர் தனது ஏராளமான மனைவிகள் மற்றும் வேலையாட்களுடன் தனி விமானத்தில் பயணித்த பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி, கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. தென்னாப்பிரிக்க நாடான எஸ்வதினியின் மன்னராக மூன்றாம் மஸ்வாதி இருந்து வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம் தனது 15 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வேலையாட்கள் புடைசூழ தனி விமானம் மூலம் அபுதாபிக்கு வந்திருந்தார். மன்னரின் இந்த பிரம்மாண்ட வருகையால், அபுதாபி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், பாதுகாப்பு கருதி சில முனையங்கள் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த வீடியோ மீண்டும் வைரலாகி மன்னரின் ஆடம்பர வாழ்க்கைக்கும், அவரது நாட்டின் மக்கள் படும் இன்னல்களுக்கும் இடையேயான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும் மன்னரின் செயலுக்குக் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒரு பயனர், ‘அவரது நாட்டு மக்களுக்கு மின்சாரமோ, குடிநீர் வசதியோ இல்லாத நிலையில், இந்த மன்னர் இப்படி ஆடம்பரமாக வாழ்கிறார்’ என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ‘மக்கள் பட்டினியால் சாகும் நேரத்தில், இந்த நபர் தனி விமானங்களில் சுற்றித் திரிகிறார்’ என்றும், ‘இப்படிப்பட்ட சூழலில்தான் ஆப்பிரிக்கக் குழந்தைகளுக்கு உணவளிக்க நிதி கேட்கிறார்கள்’ என்றும் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆப்பிரிக்காவின் கடைசி முழுமையான முடியாட்சி மன்னரான மஸ்வாதியின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அவரது நாட்டில் 60 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதுடன், வேலையின்மை, சுகாதார சீர்கேடு போன்ற பிரச்னைகள் தலைவிரித்தாடுவது குறிப்பிடத்தக்கது.