சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த பகுதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:
வங்கக்கடல் அதாவது தமிழகத்தில் டெல்டா பகுதிகளுக்கு அருகில் காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த பகுதி உள்ளது. அதனால் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழையில் பொதுவாக 443மிமீ மழை பதிவாகும். நேற்று முன் தினம் வரை 150 மிமீ கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 60 சதவீதம் அதிகம்.
அடுத்து சில நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் இந்த அளவு அதிகரிக்கும். காற்றழுத்த பகுதி சென்னையை கடந்து தென் ஆந்திர சென்ற உடன் மழை படிப்படியாக குறையும். இந்த காற்றழுத்த பகுதி கடற்கரைக்கு அருகில் உருவாகி உள்ளதால் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு குறைவு தான். சென்னையில் இன்று கனமழை பெய்யும். ஆறுகள் நிரம்பும். ஆனால் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை. அதனை தொடர்ந்து அந்தமான் பகுதியில் 25ம் தேதி புதிய காற்றழுத்த பகுதி உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.