சென்னை: தாயுமானவர் திட்டம் பயணிகளுக்கான வயது வரம்பு 70-ல் இருந்து 65ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என சிறப்பு பிரிவினருக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக சிறப்பு கவனம் தேவைப்படும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று விநியோகிக்கும்.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூத்தகுடிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று குடிமை பொருட்கள் விநியோகப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பு 70-ல் இருந்து 65 ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
