அவனியாபுரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு, மதுரை பாரைப்பத்தியில் வரும் ஆக.25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் இன்று காலை ஊன்றப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரப்பத்தியில் 237 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மாநாட்டு முகூர்த்தக்கால் ஊன்றும் விழா இன்று காலை 5.25 மணிக்கு யாகபூஜையுடன் தொடங்கியது. யாகபூஜை முடிந்தவுடன் காலை 7 மணிக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.
இதில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநாடு நடக்கும் இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த 217 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆக.25ம் தேதி (திங்கட்கிழமை) அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.