திண்டுக்கல்: தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் கடந்த 2019 பிப்ரவரியில் மத மாற்றத்தை எதிர்த்ததாக பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சி மாவட்ட பொருளாளர் அப்துல்லா வீட்டிற்கு நேற்று காலை 6 மணிக்கு, கோவையிலிருந்து என்ஐஏ டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் 4 அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனை காலை 8.30 மணிக்கு நிறைவடைந்தது. சோதனையில் குடும்பத்தினரின் செல்போன், எஸ்டிபிஐ கட்சி அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், வரும் 25ம் தேதி சென்னை என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகுமாறு அப்துல்லாவுக்கு சம்மன் கொடுத்துச் சென்றனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி 12வது வார்டு சம்சுதீன் காலனியில் வசித்து வருபவர் முகமது யாசின். எலக்ட்ரிசியன். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததாக கூறப்படுகிறது. இவரது வீட்டிலும் நேற்று அதிகாலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை 10க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இவரையும் 25ம் தேதி சென்னை என்ஐஏ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்துச் சென்றனர்.
கொடைக்கானல்: வத்தலக்குண்டு அருகே சித்தரேவு பகுதியை சேர்ந்தவர் இம்தாத்துல்லா. இவர் கொடைக்கானலில் ஆம்பூர் பிரியாணி என்ற பெயரில் 2 இடங்களில் கடைகள் நடத்தி வருகிறார். இவர் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது.
கொடைக்கானலில் இம்தாத்துல்லா வீடு அமைந்துள்ள பிளீஸ் வில்லா பகுதியிலும், இவருக்கு வீடு வாடகைக்கு கொடுத்த வீட்டின் உரிமையாளர் முபாரக் வீட்டிலும், இம்தாத்துல்லா நடத்தி வரும் கலையரங்கம், கான்வென்ட் பகுதியில் இயங்கும் ஆம்பூர் பிரியாணி கடைகளிலும், பூம்பாறை மலைக்கிராமம் உள்ளிட்ட 5 இடங்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை சோதனை நடத்தினர்.
பின்னர், அவரை கைது செய்து, வீட்டிலிருந்த ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்களை கைப்பற்றி சென்றனர். விசாரணைக்கு பின்னர், அவரை சென்னை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு தனி நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே கணவாய்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் உமர் கத்தாப் (72). இவரது மருமகன் முகமது அலி ஜின்னா, கொடைக்கானல் பூம்பாறையில் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை 6 மணிக்கு துவங்கி காலை 8.40 மணி வரை சோதனை நடத்தினர்.
* கடையநல்லூரிலும்....
தென்காசி, கடையநல்லூர் பேட்டை புதுமனை தெற்கு தெருவைச் சேர்ந்த முகமது அலி (31) என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 6 மணி முதல் திடீர் சோதனை மேற்கொண்டனர். முகமது அலி துபாயில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. காலை 9.45 மணி வரை நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றியதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.