தஞ்சையில் கோலாகலம்; மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா துவக்கம்: 400 கலைஞர்கள் பரதமாடி புஷ்பாஞ்சலி
தஞ்சை: தஞ்சையில் உலக பிரசித்தி பெற்ற ெபரியகோயில் உள்ளது. இது இன்றும் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியே இல்லாத அந்த காலத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முன் மாமன்னன் ராஜராஜ சோழன், பெரிய கோயிலை கட்டினார். பெரிய கோயிலுக்கு தினம்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா அரசு சார்பில் விமரிசையாக 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 1040வது சதய விழா இன்று (31ம் தேதி) துவங்கியது. முதல் நாளான இன்று காலை 8.15 மணியளவில் தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெற்ற மாபெரும் சதய விழா ஊர்வலம் நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் 400 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நடந்தது. இதைதொடர்ந்து மங்கள இசையுடன் விழா துவங்கியது.
இரண்டாம் நாளான நாளை காலை 6.30 மணிக்கு மங்கள இசை, 7 மணிக்கு கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7.20 மணிக்கு மாமன்னர் ராஜராஜன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தல், காலை 8 மணிக்கு திருமுறை வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமி தலைமையில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு மதியம் 1 மணி வைர பேரபிஷேகம் நடக்கிறது.
மாலை 6 மணிக்கு 4 ராஜவீதிகளில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்களின் இன்னிசையுடன், மயிலாட்டம், ஒயிலாட்டம் முதலிய கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் பெருவுடையார், பெரியநாயகி உருவ செப்பு திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. இரவு 7.05 மணிக்கு விருது வழங்கும் விழா நடக்கிறது. சதய விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
 
  
  
  
   
