பேராவூரணி : தஞ்சாவூர் அருகே பைக் மீது கார் மோதியதில் மீனவர், தனது 2 மகன்களுடன் பலியானார். இச்சம்பவம் அவரது மனைவி கண்முன் நடந்ததால் அப்பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கியது.தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சோமநாதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (35). மீனவர். இவரது மனைவி ரம்யா (30). இவர்களது மகன்கள் ராகவன்(9), தர்ஷித்(3).
நேற்று மாலை இவர்கள் 4 பேரும் ஒரே பைக்கில் மந்திரப்பட்டினத்தில் உள்ள ரம்யாவின் வீட்டிற்கு சென்றனர். பின்னர் இரவு சோமநாதன்பட்டினத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இதே போல் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (48) தனது உறவினர்களுடன், காரில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள அந்தோணியார் கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது சோமநாதன்பட்டினம் அருகே ஆடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றதால், ஆடு மீது கார் மோதி விடாமல் இருக்க ஆரோக்கியராஜ் காரை திருப்பியுள்ளார். இதில் கார் நிலைத்தடுமாறி, காளிதாஸ் ஓட்டி வந்த பைக் மீது மோதியது, இதில் காளிதாசின் மகன் தர்ஷித் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானான்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ரம்யாவை மீட்டு புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காளிதாஸ், ராகவன் ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் காளிதாஸ், ராகவன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார், காளிதாஸ், ராகவன், தர்ஷித் ஆகியோர் உடலைகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரம்யா மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கண்முன் கணவர் மற்றும் 2 மகன்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.