Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டி பகுதியில் சோளம் காயவைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

*வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்

தஞ்சாவூர் :தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டி பகுதியில் சோளம் அறுவடை பணிகள் முடிந்து காயவைத்து விற்பனை செய்வதில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். சோளத்தை நேரடியாக வந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.நாளுக்கு நாள் பெருகி வரும் இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கான தேவையால் கால்நடை வளர்ப்பை அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோழிப்பண்ணைகளும் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. இதனால் அடர் தீவனங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அடர் தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக சோளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

இதனால் சோளம் சாகுபடியை தஞ்சை பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக மானாவாரி பகுதியில் விவசாயிகள் சோள சாகுபடியை மேற்கொள்கின்றனர். காரணம் குறைந்த தண்ணீர், குறைவான பராமரிப்பு என்ற அளவில் சோளம் சாகுபடி விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒருசில பகுதிகளில் நெல்லுக்கு மாற்றுப்பயிராக சோளம் சாகுபடியும் நடந்து வருகிறது. இதற்கான விற்பனையும் உடனே முடிந்து விடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சாவூர் அருகே செங்கிப் பட்டி பகுதியில் சோளம் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். தற்போது சோளக்கதிர்கள் முற்றி அறுவடை முடிந்துள்ளது. வயலில் அறுவடை செய்த சோளத்தை தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து இல்லாத இடத்தில் காய வைக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அறுவடை செய்த சோளத்தை காய வைத்தவுடன் நேரடியாக அப்பகுதிக்கே வந்து பிற மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

கடந்த முறை சாகுபடியின் போது கிலோ ரூ.25க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது சோளம் கிலோ ரூ.23க்கு வாங்கி செல்கின்றனர். தற்போது சற்று விலை குறைந்திருந்தாலும் காத்திருந்து விற்பனை செய்வதற்கு அவசியமின்றி வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்து உடனடியாக பணத்தை தந்து விடுகின்றனர்.இதனால் அறுவடை முடிந்த ஓரிரு நாட்களிலேயே பணம் கிடைத்து விடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சோளத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால் விற்பனை விலையும் கூடுதலாகி உள்ளது. ஆனால் நிலையான விலை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், சோளம் அறுவடை முடிந்து காயவைக்கும் இடத்திலேயே வந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து விடுகின்றனர். ஆனால் நிலையான விலை இல்லாமல் அவ்வப்போது ஏற்ற இறக்கமாக உள்ளது. இருப்பினும் உடனுக்குடன் பணம் கிடைத்து விடுகிறது. இதனால் செலவு போக நல்ல லாபம் கிடைக்கிறது என்று தெரிவித்தனர்.