தஞ்சாவூர் அருகே பட்டப்பகலில் பயங்கரம் ராமதாஸ் ஆதரவு நிர்வாகியை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி: டிரைவர் உட்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு
திருவிடைமருதூர்: தஞ்சாவூர் அருகே பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த ராமதாஸ் ஆதரவு பாமக நிர்வாகி மீது நேற்று மதியம் வெடிகுண்டு வீசி கொலை முயற்சி நடந்தது. தடுக்க முயன்ற டிரைவர் உட்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் (55). இவர், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட ராமதாஸ் ஆதரவு பாமக செயலாளர். சோழமண்டல வன்னியர் சங்க மாநாடு மற்றும் பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் மாநாடு ஆகியவற்றை முன்னின்று நடத்தினார்.
இந்நிலையில் நேற்று அரசு விடுமுறை என்பதால் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. அப்போது ஸ்டாலின், தனது அறையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். மண்டல பொறுப்பாளர் ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். பிற்பகல் 12.30 மணியளவில் டாட்டா சபாரியில் இருந்து முகமூடியுடன் இறங்கி வந்த 7 பேர் கொண்ட கும்பல், பேரூராட்சி அலுவலகத்திற்குள் இருந்த ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி கொலை முயற்சியில் ஈடுபட முயன்றது. தொடர்ந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதலில் ஈடுபட்ட போது அலுவலக முன்கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
அப்போது வெளியில் நின்றிருந்த ஸ்டாலினின் டிரைவர் அருண்குமார் (25) மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் இளையராஜா (37) ஆகியோர் ஸ்டாலினை அங்கிருந்து வெளியே தப்பி செல்லும் படி தொடர்ந்து எச்சரித்தனர். இதனால் அவர் அலுவலகத்திற்குள் இருந்த கழிவறைக்குள் புகுந்து கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்.ஆத்திரம் அடங்காத கும்பல், தொடர்ந்து அரிவாளால் ஸ்டாலினை வெட்டுவதற்கு கழிப்பறைக்குள் நுழைய முயன்றபோது இளையராஜா, அருண்குமார் ஆகியோர் தடுத்தனர். இதில் 2 பேரையும் அந்த கும்பல் சரமாரி அரிவாளால் வெட்டியதில் பலத்த காயம் அடைந்தனர். தொடர்ந்து வெளியே வந்த கும்பல் மீண்டும் அலுவலகத்திற்குள்ளே 2 நாட்டு வெடிகுண்டை வீசினர். ஆனால் அது வெடிக்கவில்லை. பின்னர் அவர்கள் வந்த காரில் தப்பி சென்றனர்.
தகவலறிந்த தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெடிக்காத 2 நாட்டு வெடி குண்டுகள் பத்திரமாக மீட்கப்பட்டன. படுகாயமடைந்த இளையராஜா , அருண்குமார் ஆகியோர் கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த தகவல் பரவியதால் 7 பேர் கும்பலை கைது செய்ய கோரி பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டதோடு சாலையில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆடுதுறை கடைவீதியில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நீடித்தது. தப்பி ஓடிய மர்மகும்பலை கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து ஆடுதுறை போலீசார் கூறுகையில், கொலை முயற்சிக்கு காரணமான மர்மகும்பல் யார் என்று கண்டறிவதற்கு மூன்று இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றோம்.
கடந்த 2015ம் ஆண்டு ஸ்டாலின் சகோதரரான வழக்கறிஞர் ராஜா கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதமாக இவர்களது ஆதரவாளர்கள், எதிர் தரப்பினரில் ஒருவரை கொலை செய்தனர். அதில் ஸ்டாலின் நேரடியாக தொடர்பு இல்லை இருந்தாலும், இவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. அதனுடைய முன்விரோதம் காரணமாக நடந்துள்ளதா? அல்லது கட்சி முரண்பாடு காரணமாக நடந்துள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.