தஞ்சையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தேரிழுத்தனர்
தஞ்சை: ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் நேற்று மாலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 கோயில்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு மட்டுமே நடைபெறும். பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.
இக்கோயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். ஆண்டுதோறும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மேலும், கடந்த 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிலையில் ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்து வந்து தரிசனம் செய்தனர். பலர் நேற்று முன்தினம் இரவிலே வந்து காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.
இந்நிலையில் ஆவணி பெருந்திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகம் போன்ற காரணத்ததால் தடைபட்டிருந்த தேரோட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. அம்மன் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் நடந்தது. இதில் தஞ்சை மட்டுமிடன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று கொடியிறக்கம், விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.