Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சாவூர் அடுத்த காட்டூர் பகுதியில் பின்பட்ட குறுவை சாகுபடிக்கு நடவு பணி

*பாகுபாடின்றி குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அடுத்துள்ள காட்டூர் பகுதியில் குறுவை சாகுபடிக்காக பெண் தொழிலாளிகள் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு இயந்திர மூலம் நடவுக்கு மட்டுமே மானியம் என்றில்லாமல் குறுவை தொகுப்பு திட்டம் அனைவருக்கும் பாகுபாடின்றி செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லாததால் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

இதனால் டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி செய்து வருகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு ரூ.78.67 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் பயன்பெற விருப்பமுள்ள குறுவை சாகுபடி விவசாயிகள் விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தொகுப்புகள் வழங்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

ஆனால் ஆழ்துளை கிணறு மூலம் சுமார் 50 சதவீத விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை செய்து, தற்போது பயிர்கள் வளர்ச்சி பருவத்தில் உள்ளன. பின்பட்ட குறுவையிலும் பெரும்பாலான விவசாயிகள் விதை விட்டு சாகுபடியை தொடங்கி விட்டனர். இதற்கிடையில் குறுவை தொகுப்பு திட்டத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 1 லட்சம் ஏக்கருக்கு 2 ஆயிரம் டன் நெல் விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி மேல் நெல் விதை கொடுப்பதால்? எந்த பயனும் இல்லை என்ற எண்ணம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாய தொழிலாளர்களை வைத்து செய்யப்படும் நடவுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் பின்னேற்பு மானியம் கிடையாது என்பதும் விவசாயிகளிடையே அதிருப்தி நிலவுகிறது. இயந்திர நடவு செய்தாலும் நெல் விளைச்சல் கிடைக்கிறது. ஆட்கள் மூலமான நடவிலும் நெல் உற்பத்தி செய்யப்படும் நிலையில், எதற்காக பாகுபாடு காட்டப்பட வேண்டும் என்ற கேள்வியையும் விவசாயிகள் எழுப்புகின்றனர்.

லும் விவசாயி எத்தனை ஏக்கர் வைத்திருந்தாலும், ஒரு ஏக்கருக்கு மட்டுமே நடவு மானியம் வழங்கப்படுகிறது. தவிர, 50 சதவீத மானியத்தில் நுண்ணூட்ட கலவையை வினியோகிக்க ரூ.15 லட்சம், துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்த ஏக்கருக்கு ரூ 250 வீதமும், ஜிப்சம் உரத்துக்கு ஏக்கருக்கு ரூ.250 வீதமும், இலை வழி உரம், சூடோமோனாஸ் உள்ளிட்டவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நுண்ணூட்டக் கலவை, உரங்களுக்கான நிதி போன்றவை தொகுப்பில் வழங்கப்படுவதால் அவையெல்லாம் தேவைப்படாத விவசாயிகளுக்கு சென்றடைகின்றன. அதேசமயம் நுண்ணூட்ட சத்தும், துத்தநாக சத்தும் தேவைப்படும் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கப்படுவ தில்லை என்ற அதிருப்தியும் நிலவுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறும்போது,ஆழ்துளை கிணறு மூலம் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் தான் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்கின்றனர். மேலும் இயந்திரம் மூலம் நடவு, கூலி ஆட்களை வைத்து நடவு என பாகுபாடு பார்க்காமல் குறுவை சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் விதமாக குறுவை தொகுப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று கூறினர்.