Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தஞ்சை பெரிய கோயில் பின்புறம் அகழியை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள கருவேல மரங்கள்

*அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோயிலின் பின்புறம் உள்ள அகழியை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டைய தமிழ் மன்னர்கள் நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து காக்ககோட்டைகளை கட்டினார்கள். கோட்டைக்குள் எதிரிகள் வராமல் இருக்க கோட்டையை சுற்றிலும் அகழிகளை அமைத்தனர்.

அதில் நீர் நிரப்பப்பட்டு முதலைகள், பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் இருக்கும். அவற்றை தாண்டி கோட்டைக்குள் செல்வது முடியாத காரியமாகும். அந்த வகையில் தஞ்சை பெரியகோயிலைச் சுற்றிலும் அகழிகள் காணப்படுகிறது.

இந்த அகழி தஞ்சை பெரிய கோயிலின் பின்பகுதியில் இருந்து தொடங்கி மேலஅலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கம் வரை செல்கிறது. இந்த அகழிகளுக்கு கல்லணைக் கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதும், அகழிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் அகழியில் நிரம்பி இருக்கும் போது அந்த பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும். இதேபோல மேலவீதியில் இருந்து தென்கீழ் அலங்கம் வரை அகழி காணப்படுகிறது.

இந்த அகழிக்கு பெரிய கோயிலைச் சுற்றியுள்ள அகழியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றியுள்ள அகழியில் தண்ணீர் திறந்து விடப்படுவதில்லை. பெரிய கோயில் பின்பகுதியில் உள்ள அகழியில் மட்டும் குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் அகழி நீரின்றி வறண்டு செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக்கிடக்கிறது.பெரிய கோவிலின் பின்பகுதியில் உள்ள அகழி முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காடு போல இருக்கிறது.கருவேல மரங்களுக்கு இடையே குறைந்தளவு தண்ணீர் மறுபுறம் உள்ள அகழிக்கு பாய்கிறது.

பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அகழி இருப்பதே தெரியாத வகையில் இருந்து வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகழியில் ஆய்வு மேற்கொண்டு மீண்டும் முழுவதும் தண்ணீர் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். செடி, கொடிகள், கருவேலமரங்களை வெட்டி அகற்றிட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.