Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தஞ்சாவூர் அருகே 150 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே 150 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிபட்டி ஊர் நடுவே எல்லை காவல் தெய்வமாக வழிபடப்படும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இப்பகுதி தனியார் வணிகவியல் மேலாண்மைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் மூவேந்தன் அளித்த தகவலின் படி சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராசா மற்றும் மூவேந்தன் ஆகியோர் நேரடியாக கள ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா தெரிவித்ததாவது: தமிழர்களிடத்து தொன்று தொட்டு நடுகல் வழிபாட்டு முறை இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் எல்லைக்கல்லை பிடாரி அம்மனாக வழிபடும் முறையும் சூலம் குறியிடப்பட்ட கற்களை முனியசாமியாக வழிபடும் வழக்கமும் பயன்பாட்டில் உள்ளன.

தஞ்சை அருகே செங்கிப்பட்டியை அடுத்த அய்யாசாமி பட்டியில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்தக் கல் 3 அடி உயரத்தில் ஒன்றேகால் அடி அகலத்தில் மறை முழக்கம் மந்திரம் எழுதப்பட்ட கல்லாக உள்ளது.

பெருமாளுக்கு உரிய நாமம் இடப்பட்டுள்ளது, திருவாழி அமைப்புடன் திருவாழியில் சூலங்களும் காட்டப்பட்டுள்ளன. இந்தத் திருவாழிக்குக் கீழ். ஐந்து வரிகள் 5 கட்டங்கள் வடிக்கப்பட்டு அப்பிரிவுகளின் முடிவில் திரிசூலங்கள் காட்டப்பட்டுள்ளன.

கட்டங்களுக்குள் எழுத்துகள் பொறிக்கப்பெற்றுள்ளன.கல்வெட்டில் சிவாய நம எனும் மந்திர எழுத்துகள். நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவயந, வயநமசி என்று எழுதப்பெற்றுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது 150 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக கருதமுடிகிறது.

நோய் தீர்க்கும் காவல் தெய்வம்.ஊரில் காலரா, அம்மை போன்ற பெருநோய் ஏற்பட்டு ஊர் மக்கள் தொடர்ச்சியாக இறந்த போது தங்களை இப்பெரும் அழிவிலிருந்து காக்க இம்மாதிரியான எந்திரக் கல்லை எழுதி ஊர் நடுவே வைத்து வழிபட்டு இருக்கலாம் இக்கல் இன்றும் ஊர் நடுவே எல்லைச்சாமியாக காவல் தெய்வமாக வழிபடப்படுகிறது.

தண்ணீர் மஞ்சள் போன்றவற்றால் முழுக்காட்டி தண்ணீரை சேகரித்து ஆடு,மாடு, கோழிகள் உட்பட வீட்டுப் பகுதிகளில் மந்திரிக்கப்பட்ட நீராக தெளிக்கப்படுகிறது. இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது மேலும் இந்த எல்லைக்கல்லுக்கு சேவலை பலியிடும் வழக்கமும் இன்றும் தொடர்கிறது. இக்கல்லை காவல் தெய்வமாக வழிபடும் ஊர் மக்களுக்கு இக்கல்லில் உள்ள எழுத்து பற்றியோ எந் நாளிலிருந்து இவ்வழிபாட்டு முறை உள்ளது என்பது பற்றியோ ஏதும் தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.