தஞ்சையில் 1040வது சதய விழா: ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை; திருமுறை நூலை யானை மீது வைத்து ஊர்வலம்
தஞ்சை: உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா விமரிசையாக அரசு விழாவாக 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ராஜராஜசோழனின் சோழனின் 1040வது சதய விழா நேற்று துவங்கியது. மாலை 6.30 மணிக்கு ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவை குறிக்கும் வகையில் 1040 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து 2வது நாளாக இன்று (1ம் தேதி) காலை 6.30 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. கோயிலில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. பிறகு, திருமுறை நூலை யானை மீது வைத்து 100க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் ராஜ வீதிகளில் வீதியுலா நடந்தது.
சதய விழாவை முன்னிட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெற்றது.
பிற்பகலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெறுகிறது.இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரிய கோயில் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
