தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சிவக்குமார் (52). இவர் தண்டையார்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தெரேசா என்ற மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். சிவகுமார், தற்போது முதலமைச்சர் இல்ல பாதுகாப்பு பணியில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு பணிக்கு செல்ல இருந்துள்ளார். குடும்பத்தினர் மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். மாலையில் வீட்டிற்கு வந்தபோது, உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது. குடும்பத்தினர், வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. அதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அறையில் சிவகுமார், மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.
உடனே வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குடும்ப பிரச்னை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.