Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தண்டையார்பேட்டையில் 159 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை பெருநகர மாநகராட்சி இராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பிற்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

இராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேசின் பாலம் சாலையில் அமைந்துள்ள பால்டிப்போ பகுதியில் தண்டையார்பேட்டை கிராமத்தை சேர்ந்த பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 60 ஆயிரம் சதுர அடி நிலத்தில் 159 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 75 வருடங்களாக மாட்டு கொட்டகை அமைத்து பால் வியாபாரம் செய்து இவ்விடத்திலேயே வசித்து வந்தனர்.

இந்த இடமானது தாழ்வான பகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து 159 குடும்பங்களும் மிகுந்த பாதிப்படைவதால் இவர்களை மறுகுடியமர்வு அமர்த்த வேண்டி இருந்தது. 2024 ஆம் ஆண்டு மழைக்காலத்தில், வெள்ள நீரினால் சூழப்பட்ட இந்த பகுதியை பார்வையிட்ட துணை முதலமைச்சர் 159 குடும்பங்களுக்கும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்க ஏற்பாடு செய்வதாக குடியிருப்புவாசிகளிடம் உறுதி அளித்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, இந்த 159 குடும்பதினருக்கும் மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் மறுகுடியமர்வு செய்ய ஆணைகள் தயார் செய்யப்பட்டன.

இன்று (18.7.2025) துணை முதலமைச்சர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர மாநகராட்சி இராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பிற்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.