நெல்லை, தென்காசியில் மழை கடும் சரிவு; தாமிரபரணி ஆற்றிற்கு தண்ணீர் வரத்து குறைந்தது: அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு
நெல்லை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய ெதாடங்கிய நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக நல்ல மழை காணப்பட்டது. நேற்று காலையில் குறைய ெதாடங்கிய மழை படிப்படியாக கடும் சரிவை இப்போது எதிர்கொண்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அதிக மழையை கொடுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை மற்றும் காக்காச்சியில் இன்று காலை தலா 2 மிமீ மழையே பெய்திருந்தது. ஊத்து, காக்காச்சியிலும் இன்று 5 மிமீ மழை கூட பதிவாகவில்லை. நகர்புறங்களை பொறுத்தவரை மூலைக்கரைப்பட்டியில் மட்டுமே 1 மிமீ மழை இன்று பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று மழை டாடா காட்டிய நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் சில நாட்களாக பெய்த மழையால் நேற்று 9266 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 3,200 கன அடியாக குறைந்துள்ளது. இதேபோல் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 2 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. அதேநேரம் அணைக்கு வரும் குறைவான தண்ணீரின் காரணமாக அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 133 அடியை கடந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 107 அடியை எட்டியுள்ளது. அந்த அணைக்கு நேற்று வரை 5 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 1961 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளின் தொட்டபடி தண்ணீர் சென்ற நிலையில் தற்போது படிப்படியாக தண்ணீர் வரத்து குறைய தொடங்கியுள்ளது. முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே காட்டாற்று வெள்ளத்தால் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் பாதையில் உள்ள சிறிய அளவிலான இரும்பு பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் வெள்ளத்தால் அந்த பாலம் மற்றும் அருவிக்கு செல்லும் வழிகள் மூழ்கியுள்ளது. இதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சொரிமுத்து அய்யனார் கோயில் செல்லும் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாஞ்சோலை வனப்பகுதியில் கடந்த 4 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளது. எனினும் மணிமுத்தாறு அருவிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் ராமநதி அணைப்பகுதியில் மட்டுமே இன்று 2 மிமீ மழை பதிவாகியுள்ளது. மற்றபடி எங்கும் மழையே இல்லை. தென்காசி மாவட்டத்தில் குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட அணைகள் நிரம்பிவிட்ட நிலையில், ராமநதி, கடனா மற்றும் கருப்பா நதி அணைகள் இன்னமும் நிரம்பவில்லை. தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை பெரிய அளவு இல்லை. திருச்செந்தூர் வட்டாரத்தில் மட்டுமே லேசான மழை காணப்படுகிறது.


