வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு குழந்தைகள் போடக் கூடாது என்பார்கள். ஆனால் அதே குழந்தைகளுக்கு வெற்றிலையில் சிறிது வெல்லம், சீரகம், மிளகு வைத்துக் கொடுக்க நெஞ்சுச் சளி தீரும். மேலும் ஜீரண சக்தி அதிகரிக்கும். இவை மட்டும்தான் அவ்வளவு பலன்கள் இந்த தாம்பூலத்தில் ஒளிந்து கிடக்கின்றன. பண்டிகை காலம் வேறு வீட்டில் நிறைய வெற்றிலை, பாக்கு, என மிஞ்சுவதை தூக்கி வீசாமல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தலாம். மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? காரணம் “வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)” போன்றவை சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும்போதோ நோய் வருகிறது என்கிறது சித்த மருத்துவம். இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்து விட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் (நோய் எதிர்ப்புச் சக்தி) நம் உடம்பிற்கு வரும் எனலாம்.
நோய் எப்போது ஏற்படுகிறது? உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன. நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு வாழ்வதே. சமச்சீர் உணவு உண்ட பின்னர் வெற்றிலை பாக்கு போடுவதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இதை போடுவதால் நமது உடல் புத்துணர்ச்சி அடைந்து வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நிலைகளையும் சமன்படுத்துகிறது. இந்த மூன்று நிலைகளையும் சரியான படி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை சீராக்கக் கூடியது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிலிருந்து சீனா, பர்மா, வியட்நாம் நாடுகள் வாயிலாக மேற்கத்திய நாடுகளுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இந்தியாவிற்குதான் முதலிடம். தாம்பூலம் தரிப்பதால் ஆண், பெண் இடையே மோகம் அதிகரிக்கும். உணவு எளிதில் செரிமானமாகும். வயிற்று புழுக்கள் வெளியேறும். தொண்டைக் கட்டு, அதிக தாகம், பல்வலி ஆகியன நீங்கும். ருசியை கூட்டி, உண்ட உணவினை எளிதில் செரிமானம் செய்து விடும் தன்மை தாம்பூலத்திற்கு உண்டு. அசைவ உணவுகள் செரிப்பதற்கு, கடினமான உணவுகளை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் மலச்சிக்கல் நீங்க, குடல் சுத்தமாக தாம்பூலம் தரிப்பது நல்லது என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. அது மட்டுமின்றி தாம்பூலம் தரித்த பின்பு மனம் புத்துணர்ச்சியடைவதுடன், சிந்திக்கும் திறன் அதிகரித்து, ஆடல், பாடல் ஆகியவற்றில் மனம் ஆர்வம் கொள்வதுடன் ஆண், பெண் போக உணர்ச்சி அதிகரிக்கும் என பதார்த்த குண சிந்தாமணி என்ற சித்த மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை நீக்க வல்லது.வெற்றிலையில் உள்ள உறைப்பு கபத்தை நீக்கி விடும்.இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்கப் பட்டிருக்கிறது.
காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்புச் சத்து அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவைக் கட்டுப்படுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துக் கொண்டால் நெஞ்சில் கபம் தங்காது. இந்த முறையில்தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் வரையறை.நிலம் - உடலின் அமைப்பு, நெருப்பு - உடலின் (நொதி) (சுரப்புகள்), காற்று - சுவாசிக்கும் ஆக்ஸிஜன், நீர் - உடலில் உள்ள எல்லா திரவங்களும் (ரத்தம், நிணம்)ஆகாயம் - உடலில் உள்ள வெற்றிடங்கள். உடலில் இந்த ஐந்து மூலகங்களும் சேர்ந்து 3 தோஷங்களாக உள்ளன. அவை வாதம் (காற்று), பித்தம் (நெருப்பு), கபம் (நீர்) என்பன. இவை ஒவ்வொரு உடலிலும்
ஒவ்வொரு விகிதத்தில் இருக்கின்றன.வாதம் - காற்று, பித்தம் - நெருப்பு, சிலேத்துமம் - நீர் என மூன்று இயற்கைக் கூறுகளோடு இவை ஒப்பிடப் படுகின்றன.சித்த மருத்துவத்தை பொறுத்தவரையிலும் பஞ்சபூதங்களும், அறுசுவைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகக் கருதப்படுகிறது.
இனிப்பு - மண்ணும் நீரும், துவர்ப்பு - மண்ணும் காற்றும், கசப்பு - காற்றும் ஆகாயமும், புளிப்பு - மண்ணும் தீயும், உப்பு - நீரும் தீயும், காரம் - காற்றும் தீயும் என்ற வகையில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே இனிப்பு சாப்பிடும் பொழுது கபம், கசப்புடன் வாதமும், தீயுடன் பித்தமும் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. இவற்றை சீராக்க தாம்பூலம் பயன்படும். அதே சமயம் இதில் போதைப் பொருட்களைக் கலந்தோ, அல்லது அளவுக்கு மீறிய தாம்பூலப் பயன்பாடும் பற்கள் துவங்கி குடல் வரையிலும் பிரச்னை உண்டாக்கும். எனவே எதுவும் அளவாக எடுத்துக்கொள்ள நல்ல மருந்தாக பயன் தரும்.
- எஸ்.ரமணி,சிதம்பரம்.