*விவசாயிகள் கோரிக்கை
தேன்கனிக்கோட்டை : தளி பெரிய ஏரியில், உபரி நீர் செல்லும் பகுதியில் புதர்களை அகற்றி, பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பகுதி மற்றும் கர்நாடக மாநில வனப்பகுதியில் பெய்து வரும் மழையால், தளி பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
உபரி நீர் செல்லும் பகுதியில் முட்புதர்கள் முளைத்து காணப்படுகிறது. மேலும், ஆகாயதாமரை படர்ந்துள்ளதால் நீர்வழிப்பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உபரி நீர் செல்லும் பாதையை தூர்வாரி, பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி கூறுகையில், ‘இந்த ஏரியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. பலமுறை மனு கொடுத்தும் உபரி நீர் செல்லும் பாதையில் உள்ள முட்புதர்கள், ஆகாய தாமரைகளை அகற்றவில்லை.
தற்போது ஏரி முழு கொள்ளளவு எட்டி, உபரி நீர் செல்லும் நிலை உள்ளது. மேலும் மதகு வழியிலிருந்து செல்லும் கால்வாய் தூர்வாராமல் உள்ளது. அதை தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.