Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு 2 விமானங்களில் கடத்தி வந்த ரூ.9.5 கோடி கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

மீனம்பாக்கம்: தாய்லாந்து நாட்டிலிருந்து அடுத்தடுத்து 2 விமானங்களில் சென்னைக்கு சாக்லெட் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பயணிகள் உள்பட 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு அதிகளவில் விமானங்கள் மூலமாக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா கடத்திக் கொண்டு வரப்படுவதாக நேற்று சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்தும் விமானநிலைய சுங்கத்துறையின் ஏர்இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் நேற்று நள்ளிரவு சென்னை வந்த வெளிநாட்டு விமானப் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்துக்கு வந்து சேர்ந்தது. அதில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறையின் ஏர்இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது தாய்லாந்துக்கு சுற்றுலா விசாவில் சென்று திரும்பி வந்த வடமாநில பயணிமீது சந்தேகம் ஏற்பட்டது.

வடமாநிலத்தை சேர்ந்த இவர், தாய்லாந்திலிருந்து திரும்பி வரும்போது சென்னையில் தரையிறங்கியது ஏன் என்ற சந்தேகத்துடன் விசாரித்தனர். விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதனால் அவரை விமானநிலைய சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று, அவரது உடைமைகளை பரிசோதித்தனர்.  அவரது உடைமைக்குள் சாக்லெட் பார்சல்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள் பாக்கெட்டுகள் இருந்தன.

அவற்றை பிரித்து பார்த்தபோது, அதற்குள் பதப்படுத்தப்பட்ட ரூ.7.5 கோடி மதிப்பிலான 7.5 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வந்திருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். சிறிது நேரத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து மற்றொரு இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் தரையிறங்கியது. அதில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை ஏர்இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது வடமாநிலத்தை சேர்ந் மற்றொரு பயணி தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா பயணியாக சென்று திரும்பியவர்மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அப்பயணி மீதான சந்தேகத்தின்பேரில் அவரது உடைமைகளைப் பிரித்து சோதனை செய்தனர். இதில், அவரது உடைமைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான சுமார் 2 கிலோ பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரையும் சுங்கத்துறை ஏர்இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், அவர்களை வேறு சில சர்வதேச போதைபொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் சென்னைக்கு கடத்தி வந்த ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை வாங்கி செல்ல, சென்னை விமான நிலையத்துக்கு வெளியே ஒருவர் காத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலைய பகுதியில் சந்தேக நிலையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கஞ்சா உள்பட பல்வேறு போதைபொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பதும், அவர்தான் இந்த கஞ்சா பார்சல்களை வாங்கி, ரயில் மூலம் பிற மாநிலஙக்ளுக்கு கடத்தி செல்வதற்கு வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அவரையும் சேர்த்து, கஞ்சா கடத்தல் தொடர்பாக மொத்தம் 3 பேரை சுங்கத்துறையின் ஏர்இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இக்கடத்தலில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களை கைது செய்து விசாரிப்பதற்கு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.