மீனம்பாக்கம்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தபோது, சென்னை சேர்ந்த அவர், சுற்றுலா விசாவில் தாய்லாந்துக்கு சென்று வந்தது தெரியவந்தது. முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். எதுவும் கிடைக்கவில்லை.
சந்தேகம் தீராமல், தனியறைக்கு அழைத்து சென்று, ஆடைகளை களைந்து முழுமையாக பரிசோதித்தனர். அவரது உள்ளாடைக்குள் சிறிய சிலிண்டர் வடிவிலான, 3 உருளைகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அவைகளை பிரித்து பார்த்தபோது, ரூ.90 லட்சம் மதிப்பிலான முக்கால் கிலோ தங்க பசை இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பயணியை கைது செய்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
