10 வருட காதலுக்கு காதலியின் தாய் எதிர்ப்பு காதலனை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்: மறியலால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் மொக்கானிக் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மயிலாடுதுறை அருகே அடியக்கமங்கலம் பெரிய தெருவை சேர்ந்த குமார் மகன் வைரமுத்து(28). ஐடிஐ படித்துள்ள இவர், டூவீலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த 26 வயதான பட்டதாரி பெண்ணும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.
அந்த பெண் சென்னையில் தங்கி தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வைரமுத்து மெக்கானிக் என்பதாலும், போதிய வருமானம் இல்லாததாலும் காதலை கைவிடுமாறு மகளை அடிக்கடி கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர், காதலை கைவிடவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் பெண்ணின் தாய், வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று அங்கு அவரிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரிய வந்த அந்த பெண், கடந்த வாரம் ஊருக்கு வந்தார். பின்னர் காதல் விவகாரம் தொடர்பாக கடந்த 12ம்தேதி பெண்ணின் குடும்பத்தினர் மயிலாடுதுறை போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து இருதரப்பினரையும் போலீசார், காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பெண், வைரமுத்துவை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக கூறி விட்டார். இதையடுத்து அந்த பெண்ணை காதலன் வைரமுத்து வீட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அப்போது வைரமுத்துவின் பெற்றோர், ஒரு மாதம் போகட்டும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கொள்ளலாம், அதுவரை சென்னையில் வேலை பார்த்துக்கொண்டு இரு என தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் காதலியை சென்னைக்கு அனுப்பிவிட்டு வைரமுத்து வேலைக்கு சென்றார்.
வேலை முடிந்து இரவு 11மணி அளவில் வீட்டிற்கு டூவீலரில் வந்தார். அப்போது அடியக்கமங்கலம் அருகே 3 பேர் கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரி வெட்டியது. தப்பி ஓட முயன்ற போது, ஓட ஓட விரட்டி சென்று கழுத்து, கைகளில் சரமாரி வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த வைரமுத்துவை அப்பகுதியினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைரமுத்து உயிரிழந்தார்.
தகவலறிந்த எஸ்பி ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
இதுதொடர்பாக வைரமுத்துவின் பெற்றோர், மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தனர். அதில், மகனை காதலியின் குடும்பத்தினர் வெட்டி கொன்று விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் சாலையில் வைரமுத்துவின் உறவினர்கள் நேற்று காலை 11 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து கிட்டப்பா அங்காடி அருகே வைரமுத்துவின் உறவினர்கள் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மறியல் போராட்டம் 3 மணி வரை நீடித்தது.
எஸ்பி ஸ்டாலின் நேரில் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, 4 தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் அனைவரையும் ைகது செய்து நடவடிக்கை மேற்கொள்வோம் என்று கூறினார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.