Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தடைகளைக் கடந்து செல்லுங்கள்!

கடின உழைப்பாலும், திறமையாலும் எதையும் சாதிக்கக் கூடியவர்களே ஒரு மேம்பட்ட நிலையை அடைவதற்கு பாடுபடுகிறார்கள். சாதாரண மக்களின் உலகத்தில் இருந்து தாங்கள் வெகு தொலைவுக்குச் செல்கிற வரைக்கும் தங்கள் முயற்சியில் அவர்கள் ஓய்வதேயில்லை. ஆனால் இரண்டாம் தர வாழ்க்கையையே திருப்தியுடன் வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சமூகம் இவர்களை அங்கீகரித்து, வெகுமதி அளிப்பதில்லை.சமூகம் உங்களைச் சாதாரண நிலையிலேயே வைத்திருக்க பார்க்கும், தன்னுடைய கெடுபிடிகளை உங்களுடைய வாழ்வின் முற்பகுதியிலேயே அது தொடங்கிவிடும். சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்து, தங்களுடைய கடும் உழைப்பு,தளராத முயற்சி,அதீத நம்பிக்கையோடு வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் இதனை அறிவார்கள்.யானையை சர்க்கஸ் வேலைக்கு எப்படிப் பழக்குகிறார்கள் தெரியுமா?அந்த யானை குட்டியாக இருக்கும்போது, நிலத்தில் ஊன்றப்பட்ட ஒரு கம்பத்தில் தினமும் அதைக் கட்டி வைப்பார்கள்.தனது கழுத்தில் உள்ள கயிற்றை விசையாக இழுத்தாலும் தன்னால் அதற்கு மேல் போக முடியாது என்பதை அந்த ‘பேபி’ யானை தெரிந்து கொண்டு விடும். அது போதிய வளர்ச்சி அடைந்த போதும், தான்பிணைக்கப்பட்ட கம்பத்தை முறித்துப் போட்டுவிட்டு அது போவதில்லை. இத்தனைக்கும் ஒரு சிறிய கம்பத்துடன் தான் அதைப் பிணைத்து இருப்பார்கள். ஆனால் அது கயிற்றில் இருந்து விடுபட முயற்சிப்பதில்லை.தன்னைக் கட்டி போட்ட இடத்துக்கு அப்பால் தன்னால் போக முடியாது என்ற பழைய நினைப்பிலேயே அது இருந்து கொண்டிருக்கும்.

நாமும் அந்த யானையைப் போலத்தான் நம்முடைய ஆசிரியர்களாலும், சகமாணவர்களாலும் நமக்குப் பயிற்சி அளிக்கிறவர்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றோம். நம்முடைய பெற்றோர்களும் நம்மை சராசரி குழந்தைகளாகவே கருதிக்கொள்கிறார்கள்.‘உன் வயசுக்கு மீறி காரியத்தை செய்யாதே ‘உன் தகுதிக்கு மீறி ஆசைப்படாதே என்கிற உபதேசம் எங்கும் ஒலிக்கும். மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே நீயும் செய். மற்றவர்கள் போல தான் நீயும் இருக்க வேண்டும். அவரிலிருந்து ‘நீ வேறாகி விடக்கூடாது’ இப்படி சமூகம் போதிக்கிற போது, உங்கள் தனித்தன்மை வெளிப்பட வாய்ப்பு ஏது?‘மற்றவர்கள் செய்யத் தயங்குகின்ற ஒன்றை நீ செய்து பார்’என்று உங்களை யாரும் ஊக்குவிப்பதில்லை. வாழ்வின் எல்லா பரப்புகளிலும் சாதாரண நிலையில் இருந்து கொள்ளும் படியாகவே நாம் கட்டுப்படுத்தப்படுகிறோம். ஆனால் இத்தகைய தடைகளை எல்லாம் கடந்து தனது லட்சியத்தை அடைபவர்கள் தான் இந்த உலகத்தில் சாதிக்கின்றார்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.

தென்கொரியாவில் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இதில், 43 நாடுகளைச் சேர்ந்த, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் சார்பில், 59 வீரர்கள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில், இந்திய வீராங்கனையான ஜோதி யர்ராஜி, தனது இலக்கைச் சரியாக 12.96 வினாடியில் கடந்து, தங்கப் பதக்கம் வென்றதுடன் புதிய சாதனையையும் படைத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு நடந்த போட்டியிலும், ஜோதி தங்கம் வென்றிருந்தார். தனது முந்தைய சாதனையைத் தற்போது மீண்டும் அவரே முறியடித்துள்ளார்.தனது இந்த தடை ஓட்ட வெற்றியினால் மட்டுமல்லாமல், தன் வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட தடைகளையும் வெற்றிகரமாகத் தாண்டி, சாதனை படைத்துள்ளதால், சமூகவலைதளப் பக்கங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறார் ஜோதி.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜோதிக்கு தற்போது 25 வயதாகிறது. இவரது தந்தை சூர்யநாராயணா தனியார் நிறுவனமொன்றில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். தாயார் குமாரி அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்பவராகவும், தனியார் மருத்துவமனை ஒன்றில் துப்புரவு தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருகிறார்.

பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், தடகளம் மற்றும் கல்வியில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற தீவிர அர்ப்பணிப்பை சிறுவயதில் இருந்தே, தனது ஒவ்வொரு செயல்களிலும் வெளிப்படுத்தினார் ஜோதி. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாகப் பயன்படுத்தினால் மட்டுமே வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும் என்ற தெளிவு, அந்த பெண்ணிடம் அப்போதே இருந்துள்ளது. சிறுவயதில் இருந்தே தடை ஓட்டத்தில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய ஜோதிக்கு, அவரது பள்ளியில் இருந்த உடற்கல்வி ஆசிரியரே முதல் தடகள ஆசானாக இருந்துள்ளார். உள்ளூரில் நடந்த போட்டிகளில் எல்லாம் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார். அவரது வெற்றிக்கு, அவரது உயரமும் ஒரு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் சிறுசிறு போட்டிகளில் விளையாடிய ஜோதிக்கு மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில் கிடைத்த வெற்றி பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, ஹைதராபாத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) மையத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அங்கிருந்த திறமையான தடகளப் பயிற்சியாளர்களின் சரியான வழிகாட்டுதல், ஜோதியின் திறமையை மேலும் மெருகேற்ற உதவியது. அதன் பலனாக அடுத்தடுத்து கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் வெற்றிகளைக் குவித்தார் ஜோதி. அவரது திறமைக்குக் கிடைத்த பரிசாக, ரிலையன்ஸ் அறக்கட்டளை அவருக்கு பயிற்சி அளிக்க முன்வந்தது. இது தேசிய அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற அவருக்கு பெரும் உதவியாக இருந்தது.ஜோதியின் வாழ்க்கையில் வெற்றிகள் மட்டுமே இல்லை.பலபின்னடைவுகளும் இருக்கத்தான் செய்தது. காயங்கள் காரணமாக அவர் சில மாதங்கள் கட்டாய ஓய்வில் இருக்க வேண்டி இருந்தது. தேசிய சாதனைகளை அவர் பலமுறை முயன்றும் நூலிழையில் அந்த வாய்ப்புகள் பறி போனது. ஆனாலும் தனது தோல்விகளால் அவர் சோர்வடையவில்லை. ஒவ்வொரு தோல்விக்கும் பின்பும், பின்னடைவிற்குப் பின்னும் பன்மடங்கு சக்தியுடன் மீண்டும் களத்தில் இறங்கினார் ஜோதி.

தொடர் பயிற்சி மற்றும் முயற்சிகளின் பலனாக, 2022ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில், 12.7 வினாடிகளில் தனது தனிப்பட்ட சாதனையைப் பதிவு செய்தார். இதன்மூலம் மகளிருக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றையும் ஜோதி படைத்தார்.தொடர்ந்து தனது முந்தைய சாதனைகளைத் தானே முறியடித்து, மேலும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார் ஜோதி. இந்தியாவின் வேகமான பெண் தடை தாண்டும் வீராங்கனை என்ற பெருமையையும் ஜோதி பெற்றுள்ளார்.ஆசிய தடகளப் போட்டியில் அவரது வெற்றி, அவரது வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரத்தைச் சேர்த்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.ஜோதியின் இந்த சாதனையைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஆந்திர மாநில முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து பாராட்டை தெரிவித்துள்ளார். ஜோதி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த போதும் பல்வேறு தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து இந்தியாவின் மிகச் சிறந்த தடகள வீராங்கனையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.