Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 4 வழித்தட உயர்மட்ட சாலை பணி; அமைச்சர் ஆய்வு: திட்டமிட்டபடி பணிகளை முடிக்க அறிவுறுத்தல்

சென்னை: அண்ணா சாலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார், அண்ணா சாலைபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் பொருட்டு, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, உயர்மட்ட 4 வழித்தட சாலை அமைக்கும் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கள ஆய்வு மேற்கொண்டார்.

தேனாம்பேட்டையிலிருந்து - சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு உட்பட ஏழு முக்கிய சாலை சந்திப்புகளை கடக்கும் வகையில் 3.20கி.மீ. நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கம் பணி திட்டமிடப்பட்டு, ரூ.621 கோடி மதிப்பீட்டில், பணிகள் நடந்து வருகின்றது. இந்த பணிகள் 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை இல்லாத இடத்தில், 655 மீட்டர் நீளத்திற்கு, 22 தூண்கள் அமைக்கப்படவுள்ளது. இவ்விடத்தின் நிலத்தூண் அடித்தளம் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை உள்ள இடத்தில் 1955 மீட்டர் நீளத்திற்கு, 69 தூண்கள் அமைக்கப்படவுள்ளது. பாலத்தின் அழுத்த திறன், சுரங்கப்பாதை மேல்அடுக்கில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மைக்ரோ பைல் என்ற புதிய தொழில்நுட்ப முறையில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, தற்போது ஜீயோ சிந்தெட்டிக் என்ற முறையில் மண்ணின் தாங்குத் திறன் அதிகரிக்கும் வகையில், ஜீயோ செல், ஜீயோ டெக்ட்டில்ஸ் மற்றும் ஜீயோ கிரிட் போன்ற ஏழு அடுக்குகளாக அமைக்கப்படவுள்ளது.

நாளை மறுநாள்(26ம் தேதி) மண்ணின் தாங்குத் திறனை சோதனை செய்ய அன்று திட்டமிடப்பட்டுள்ளது. 460 மீட்டர் நீளத்திற்கு தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் மெட்ரோ நிலையங்களில், 41 போர்டல் ப்ரேம் அமைக்கப்பட்டு, உயர்மட்டப் பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 3 கட்டப் பணிகளும், தனித்தனியாக பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, திட்டமிட்ட இலக்கின்படி பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்தகாரருக்கும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

வடபழனியில் உள்வட்டச் சாலையில் ரூ.360 லட்சம் மதிப்பீட்டில் 550 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 110 மீட்டருக்கு வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. வடிகால் அமைக்கும் இடத்தில் மின்தடங்கள் மின் மாற்றிகள். மெட்ரோ குடிநீர் குழாய்கள், தெரு விளக்குகள், உள்ளிட்ட சேவை அமைப்புகளை மாற்றியமைத்து பணிகளை மேற்கொள்வதால், இப்பணிகளை வரும் ஜுன் மாதத்திற்குள் விரைந்து முடிக்கப்பட வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினார்.