* உலகிலேயே முதன்முறையாக சென்னையில் அமைகிறது, பாலத்தின் அழுத்தம் சுரங்கத்தை பாதிக்காமல் வடிவமைப்பு, 3டி வடிவிலான படத்தை வெளியிட்டது நெடுஞ்சாலைத்துறை
தே னாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கிலோ மீட்டர் தூரத்திற்கு உலக அளவில் மெட்ரோ சுரங்கப்பாதையின் மேல் எழுப்பப்படும் முதல் சாலை மேம்பாலத்தின் 3டி வடிவிலான படத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். சென்னை அண்ணா சாலை சென்னை மாநகரின் மிகவும் முக்கியமான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. அண்ணா சாலையில் பல்வேறு அரசுத் துறைகளின் தலைமையங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள் வங்கி தலைமையகங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருவதால் இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
குறிப்பாக, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள 3.5 கி.மீ தூரத்தை கடக்க சராசரியாக 25 முதல் 30 நிமிடங்கள் ஆகிறது. இப்பகுதிக்குட்பட்ட அனைத்து சாலை சந்திப்புகளிலும் வாகனங்கள் அணிவகுத்து அதிகநேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. எனவே, இப்போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், சென்னை அண்ணா சாலையில், 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, தற்போது அண்ணா சாலையில் கட்டுமானத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும் கான்கிரீட் இல்லாமல் இரும்பு தூண்களால் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் எதிர்பார்த்தைவிட வேகமாக நடந்து வருகிறது. மேலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக அளவில் மெட்ரோ சுரங்கப்பாதையின் மேல் எழுப்பப்படும் முதல் சாலை மேம்பாலம் இதுவாகும். இதற்கான 3டி அனிமேஷன் படங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது: தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கிலோ மீட்டர் தொலைவிற்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி ரூ.621 கோடியில் நடந்து வருகிறது. இந்த உயர் மட்ட சாலை மேம்பாலம் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்படுகிறது.
அதன்படி, உலக அளவில் நிலப்பரப்பிற்கு கீழே இயக்கத்தில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை ஓடுதளத்திற்கு மேலே கட்டப்படும் முதல் சாலை மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலத்தை வடிவமைப்பது பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இந்த பாலத்திலிருந்து வரும் அழுத்தம் சாலையின் கீழே தற்போது இயங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளை சிறிதளவும் பாதிக்காத வண்ணம் வடிவமைக்க வேண்டி இருந்தது. மேலும் பாலத்தின் அடித்தளம் அமைக்க ஆழமான பள்ளங்களை மற்றும் நீண்ட துளைகளை எடுக்க முடியாத சூழலும் இருந்தது.
எனவே ஆழம் குறைந்த அடித்தளம் மட்டுமே அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ஆனால், இப்பகுதியில் மண்ணின் தாங்கும் திறன் குறைந்த அளவே உள்ளதால், ஆழம் குறைந்த அடித்தளம் கொண்டு வடிவமைப்பது சாத்தியமற்றதானது. இதற்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வல்லுநர்கள், ஐஐடி மெட்ராஸ் வல்லுநர்கள் மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்த உயர்மட்ட சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினால் ஆன முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும், மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தி அடித்தளம் அமைக்கும் வகையிலும், வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள இறுதி செய்யப்பட்டது. இந்த மேம்பாலத்தின் அடித்தளம் மற்றும் மேல்தளம் தவிர அனைத்து பகுதிகளும் அதாவது தூண்கள், தூண்களின் தலைப்புப் பகுதி, உத்திரங்கள் ஆகிய அனைத்தும் எக்கினால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வழக்கமான கட்டமைப்புகளுடன் ஒப்பிடும்போது, எக்கு தூண்கள் மற்றும் இணைந்த விட்டங்கள் கொண்ட வடிவமைப்பு, குறைந்த சுமை பரிமாற்றத்தை உறுதி செய்கிறது. மேலும், இந்த வடிவமைப்பு 30 மீட்டர் நீளமுள்ள பெரிய இடைவெளிகளை அனுமதிக்கிறது. அதேசமயம், ஆர்சிசி அமைப்பில் இடைவெளிகளின் நீளம் 15 மீட்டராக கட்டுப்படுத்தப்படும். எக்கு கட்டமைப்புகளை தொழிற்சாலையில் முன்கூட்டியே தயார் செய்து, குறைந்த நேரத்தில் நிறுவுவதன் மூலம் கட்டுமான காலம் குறைகிறது.
இது வழக்கமான ஆர்சிசி கட்டமைப்புகளுடன் ஒப்பிடும்போது திட்ட கட்டுமான நேரத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முறையானது, பரபரப்பான ஜிஎஸ்டி சாலையில் தினசரி பயணிகளின் இடையூறுகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, எக்கு கட்டமைப்பின் செலவை ஒரு வழக்கமான ஆர்சிசி மேம்பாலத்துடன் ஒப்பிடுவது பொறுத்தமற்றது. இந்த திட்டத்தின் நேர்பாட்டில் தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் ஆகிய பகுதிகளில் சுரங்கப்பாதைகளை தவிர்த்து, இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.
இங்கு மேம்பாலத்தின் கட்டுமானமானது மிக பாதுகாப்பாக செய்யப்பட வேண்டும். இந்த மேம்பாலம், சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையத்தின் உதரவிதான சுவரில் உள்ள சிறப்பு தாங்கு தூண்கள் மீது அமர்த்தப்பட வேண்டும். கட்டுமான நடவடிக்கைகள், பயணிகளின் தொடர்ச்சியான பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு, திட்டமிட்டு செய்யப்பட வேண்டும். இது காலமெடுக்கும் மற்றும் கடினமான பணியாகும். மேலும் பாலத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய, அதிநவீன துளையிடும் மற்றும் நிரப்புதல் நுட்பங்கள் தேவை.
மேம்பாலத்தின் தூண்கள் உதரவிதான சுவர்களுடன் சரியாக நேர்கோட்டில் அமைக்கப்பட வேண்டும். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினால் ஆன முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும், மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டும் மேம்படுத்தி தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தி.நகரில் அமைக்கப்பட்டு வரும் இரும்பு பாலம் போல இந்த உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது.
இந்த பணிகள் 18 மாதங்களில் முடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இரவு பகல் என முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கட்டுமானத்திற்காக மெட்ரோ மற்றும் இதர தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆலோசனைப்படி கட்டப்பட்டு வருகிறது. அதன்படி வரும் டிசம்பர் மாதம் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* அடித்தள ரகசியங்கள்
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளுக்கு மேலே அமைதல் மற்றும் சிக்கலான மண் மற்றும் அடித்தள நிலைமைகள்:
* தரைமட்டத்திலிருந்து 11 மீட்டர் முதல் 14 மீட்டர் ஆழத்தில் இயங்கிவரும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறப்பு அடித்தளங்கள், தொடர்ச்சியான கட்டமைப்பு கண்காணிப்பு மற்றும் பொறியியல் தீர்வுகள் தேவைப்பட்டன.
* சுரங்கப்பாதையின் மீது ஏற்படும் அழுத்தம் ஒரு சதுர மீட்டருக்கு 6 டன் என்ற அளவில் குறைக்கப்பட வேண்டி இருந்தது.
* சுரங்கப்பாதைகளுக்கு மேலாக உள்ள மண் குறைவான தாங்கும் திறன் கொண்ட மண் என்பதால், ஆழமற்ற அடித்தளங்கள் மற்றும் மண் உறுதிப்படுத்தும் நுட்பங்கள் போன்ற மேம்பட்ட நில மேம்பாட்டு முறைகள் தேவைப்பட்டன.
* அடித்தளத்தில் உருவாகும் அழுத்தம் 18 முதல் 22 டன்/ச.மீ. என்ற அளவில் இருக்கும். இதனை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையின் மீது அனுமதிக்கப்படும் உச்சபட்ச அழுத்தமான 6 டன்/ச.மீ. என்ற அளவிற்கு குறைக்க வேண்டி இருந்தது.
* ஐஐடி மெட்ராஸ், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனைக்கு பிறகு சுரங்கப்பாதைகளில் அழுத்தத்தை குறைக்க உதவும் வகையில் இந்த வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டது.
* பிஎல்ஏஎக்ஸ்ஐசி 3டி (PLAXIS 3D) என்ற மென்பொருள் மூலம் தனி மாதிரி உருவாக்கப்பட்டு, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.
* இந்த பணிகள் 18 மாதங்களில் முடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கட்டுமான பணிகள் நடந்து வருகிறது* எப்படி எப்படி தாங்கு திறன் எப்படி? மேம்பட்ட நில மேம்பாட்டு முறைகள் மூலம் மண்ணை உறுதிப்படுத்துதல்
* தற்போதுள்ள சாலை மட்டத்திலிருந்து 7 மீட்டர் முதல் 8 மீட்டர் ஆழத்திற்கு சிறு துளை தூண்கள் மைக்ரோ பைலிங் மற்றும் ஜியோ சவ்வுகளை பயன்படுத்தி மண் மேம்படுத்துதல் செய்யப்படுகிறது.
* ஜியோ சவ்வுகளை ஒட்டும் தன்மையற்ற மணலைக் கொண்டு அடுக்குகளாய் நிரப்புவதால், அழுத்தத்தை குறுகிய ஆழத்தில் சுரங்கப்பாதையை பாதிக்காமல் கடத்துகிறது.
* மெட்ரோ சுரங்கப்பாதையில் சிறப்பு கருவிகளை நிறுவுவதன் மூலம் சுரங்கப்பாதையில் உருவாகும் அழுத்தம் கண்காணிக்கப்படுகிறது.
* திறந்த அடித்தளத்திற்கு கீழே முக்கோண வடிவத்தில் சம இடைவெளியில் மைக்ரோபைல்கள் அமைக்கப்படுகின்றன. இதன் விட்டம் 200 மிமீ மற்றும் இது சிறப்பு சேர்க்கைகளுடன் சிமென்ட் கிரவுட் செய்யப்படுகிறது.
* மைக்ரோபைல்கள் மீது ஒட்டும் தன்மையற்ற மண்ணின் ஒரு அடுக்கு நிரப்பப்பட்டு திடப்படுத்தப்படுகிறது. பின்னர், ஒட்டும் தன்மையற்ற மண் அடுக்கின் மீது ஊடுருவாகாத ஜியோ டெக்ஸ்டைல் அடுக்கு பரப்பப்படுகிறது. பின்னர் அது மீண்டும் ஒட்டும் தன்மையற்ற மண்ணின் ஒரு அடுக்குடன் நிரப்பப்படுகிறது. அதன் பிறகு அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் அல்லது பாலிப்ரொப்பிலீன் ஜியோசெல் பரப்பப்படுகிறது.
* ஜியோ செல்கள் ஒட்டும் தன்மையற்ற மண்ணால் நிரப்பப்பட்டு, திடப்படுத்தப்படுகிறது. பின்னர் ஒத்திசைவற்ற மண் நிரப்புதலுடன் கூடிய 2வது அடுக்கு ஜியோ செல்கள் செய்யப்படுகின்றன. மீண்டும் ஒரு அடுக்கு மண் போடப்பட்டு திடப்படுத்தப்படுகிறது. இதற்கு மேல், ஜியோ கிரிட்டின் ஒரு அடுக்கு போடப்பட்டு, இறுதியாக ஒத்திசைவற்ற ஒரு அடுக்கு நிரப்பப்பட்டு அதன் மீது அடித்தளம் அமைக்கப்படுகிறது.
* மண்ணின் தாங்குதிறன் இன்னும் மோசமாக இருக்கும் சில இடங்களில், மைக்ரோபைல்களின் எண்ணிக்கை நெருக்கமான இடைவெளியுடன் அதிகரிக்கப்படுகிறது. மேலும் மண் நிரப்புதலுடன் கூடிய ஜியோ செல்கள் மூன்று அடுக்குகள் பயன் படுத்தப்படுகின்றன.
* இந்த செல்லுலார் கட்டமைப்புகள் விரிவாககக் கூடியவை, மண், சரளை அல்லது பிற பொருட்களை கட்டுப்படுத்தும் தேன்கூடு போன்ற வலையமைப்பை உருவாக்குகின்றன, இதனால் மண் அடர்த்தி கூட்டப்பட்டு, நிலம் மேம்படுத்தப்படுகிறது.
* ஒவ்வொரு அடித்தள பகுதியிலும், மதிப்பிடுவதற்கு மண் மேம்பாட்டுப் பணிகள் முடிந்த பிறகு சுமை சோதனை மேற்கொள்ளப்பட்டு, மண்ணின் தாங்கு திறன் கணக்கிடப்படுகிறது.