Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை பாலத்தின் எக்கு கட்டமைப்பு பணிகள் ஐதராபாத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 3.20 கி.மீ. நீளத்திற்கு ரூ.621 கோடியில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.  இதற்காக கடந்த 23ம் தேதி குஜராத் மாநிலம், வதோதராவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆந்திர மாநிலம், ஐதராபாத் குளோபல் தொழிற்சாலையில் 3,400 டன் எடைகொண்ட முன்வார்க்கப்பட்ட கட்டமைப்புகளின் பற்றவைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்து, இப்பணிகள் அனைத்தும் தரத்திற்கு ஏற்ப தயார் செய்யப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘‘மேம்பாலத் தூண்கள், மேல்தாங்கிகள், உத்திரங்கள் போன்ற முக்கியமான கட்டமைப்புகள் அனைத்தும் முன்வார்க்கப்பட்ட எக்கில் தயாரிக்கப்படுகின்றன என்பதே இந்த கட்டுமானப் பணியின் தனிச் சிறப்பாகும். சுமார் 15,000 டன் எடையுள்ள இக்கட்டமைப்புகள் குஜராத் மாநிலம், வதோதரா, ஆந்திர மாநிலம், ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் விரைவாக உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்படுகின்றன.

இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன், அண்ணாசாலைப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் குறையும், தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையேயான பயண நேரம் கணிசமாக குறையும், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வசதிகள் ஏற்படும்’’ என்றார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் செயலாளர் செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் சரவணசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.