Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலப் பணிகளை நள்ளிரவில் ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: சென்னை, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு திட்டமிட்டு, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, மேம்பாலம் கட்டும் பணியைத் துவக்கி, தற்போது, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாலத்தில் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்ற அமைச்சரின் ஆணைக்கிணங்க, நேற்று (13.10.2025) அன்று நள்ளிரவில் பணிகள் தொடங்கியது. அமைச்சர் பணித் தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார்.

3.20 கி.மீ. நீளமுடைய இந்த மேம்பாலத்தில் அடித்தளப் பணிகளும், இரும்புத் தூண்கள் அமைக்கும் பணிகளும் ஏற்கெனவே நிறைவுபெற்ற நிலையில், மேம்பாலக் கட்டுமானத்தில் மிக முக்கியமான கட்டமாக கருதப்படும் இரும்பு குறுக்கு உத்திரங்கள் (Steel Cross Girder) பொருத்தும் பணி நேற்று, நள்ளிரவில் தொடங்கியது. ஒவ்வொரு உத்திரமும் 22 டன் எடையுடையது. குறுக்கு உத்திரம் (Cross Girder) 9 டன் எடை கொண்டது. ஒரு பாலக்கண்ணுக்கு (Span) 5 உத்திரங்கள் மற்றும் 2 குறுக்கு உத்திரங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு பாலக்கண்ணில் மொத்தம் 110 டன் எடையுள்ள இரும்பு கட்டமைப்பு அமைக்கப்படும். இவ்வளவு பருமனான இரும்பு உத்திரங்களை தூக்குவதற்காக 150 டன் கொள்ளளவு கொண்ட உயர்திறன் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வெற்றிக்கரமாக பொருத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகளின் முன்னேற்றத்தை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நள்ளிரவில் பணித்தளத்தில் நீண்டநேரம் பார்வையிட்டார்.

இந்த உயர்மட்ட மேம்பாலப் பணிகள் நிறைவு பெற்றவுடன் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையேயான போக்குவரத்து நெரிசல் குறையும். வாகனங்கள் விரைவாக செல்வதுடன் பயண நேரம் குறையும். அமைச்சர் நேரடி ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கு.கோ.சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் வி.சரவணசெல்வம் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினர் உடனிருந்தனர்