Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களுக்கு நிதியுதவி: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் ரூ.2.50 கோடி நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் ரூ.2.50 கோடி வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும்.

இவ்வாறு அமையவுள்ள ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற் கூடங்களுடன் 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்காவின் அமைப்பு பின்வரும் உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். நிலம், உட்கட்டமைப்பு வசதிகள் (சாலைவசதி, சுற்றுசுவர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர் விநியோகம், தெருவிளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி போன்றவை).

ஆய்வுக் கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப் பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள் உற்பத்தி தொடர்பான தொழிற் கூடங்கள் இயந்திரங்கள் மற்றும் தள வாடங்கள். எனவே, இம்மூன்று இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும்.

மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, சேலம் மற்றும் 1ஏ-2/1, சங்ககிரி மெயின்ரோடு, குகை, சேலம் - 636 006 என்ற முகவரியிலும், 0427- 2913006 என்ற எண்ணிலும், ddtextilessalemregional@gmail.com என்ற இணையதளத்திலும் அணுகலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.