Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாடப்புத்தகத்தில் அக்பர் ஆட்சி கொடூரமானது என சேர்ப்பு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்சிஇஆர்டி: தலைவர்கள் கண்டனம்

சென்னை: மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் என்.சி.இ.ஆர்.டி. 8ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் அக்பர் ஆட்சி கொடூரமானது என சேர்த்திருப்பதற்கு வைகோ மற்றும் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) 8ம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகத்தில். சமூகத்தை ஆராய்தல்; இந்தியா மற்றும் அதற்கு அப்பால் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது. மேலும், பாபர் நகரங்களில் முழு மக்களையும் கொன்று குவித்த ஒரு மிருகத்தனமான, இரக்கமற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுரங்கசீப் கோயில்களையும், குருத்வாராக்களையும் அழித்த ராணுவ ஆட்சியாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்பரின் ஆட்சி கொடூரமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.இந்துத்துவ சனாதன சக்திகளின் திட்டப்படி நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கும் என்.சி.இ.ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, உடனடியாக பாடப்புத்தகங்களில் இருந்து இத்தகைய கருத்துக்களை நீக்க வேண்டும்.

நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர்): 2025-26 கல்வியாண்டிற்காக வெளியிடப்பட்ட 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் முகலாய மன்னர்களான பாபர், அக்பர் மற்றும் அவுரங்கசீப் ஆகியோரை கொள்ளையர்கள் மற்றும் வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் எனச் சித்தரித்து, அவர்களின் கலாச்சார, நிர்வாக, மற்றும் கட்டிடக்கலை பங்களிப்புகளை முற்றிலுமாக நீக்கி, இந்தியாவின் பன்முக வரலாற்றை வேண்டுமென்றே திரித்து எழுதப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த திருத்தங்கள், கல்வியைக் காவிமயமாக்குவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக தோன்றுகின்றன. இத்தகைய செயல்கள் மாணவர்களிடையே பிளவை உருவாக்குகின்றன. என்சிஇஆர்டி உடனடியாக பாடப்புத்தகங்களை மறுபரிசீலனை செய்து, வரலாற்று ரீதியாக துல்லியமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.