புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் அவரது சக நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு, 2 விஸ்கி பிராண்டுகளுக்கு இடையேயான வர்த்தக முத்திரை தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்களான முகுல் ரோத்தகி மற்றும் ஹரிஷ் சால்வே ஆகியோர் ஆஜராகினர். அப்போது, வழக்கின் முக்கிய ஆதாரமாக, சர்ச்சைக்குரிய இரண்டு நிறுவனங்களின் விஸ்கி பாட்டில்களையும், டெட்ரா பேக்குகளையும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இது கர்நாடகாவில் அதிகம் விற்பனையாகும் டெட்ரா பாக்கெட் விஸ்கி என்று ரோத்தகி கூறினார். உடனே நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறுகையில்,‘இதை அனுமதிக்க வேண்டுமா? இது மிகவும் ஆபத்தானது என்று நாங்கள் நினைக்கிறோம்.
இதை மாணவர்கள் தங்கள் பைகளில் பள்ளிகள் அல்லது கல்லூரிகளுக்கு எடுத்துச் செல்லலாம். பெற்றோர்களை எளிதில் ஏமாற்றலாம். இது போல் பார்ப்பது எனது வாழ்க்கையில் இதுவே முதல் முறை. இந்த வகையான பாக்கெட்டுகளை அரசாங்கங்கள் எவ்வாறு அனுமதித்தன. யாராவது பொது நல வழக்குகளை தாக்கல் செய்தால், நாங்கள் ஆராய விரும்புகிறோம்’ என்றனர். பின்னர் நீதிபதி சூர்யகாந்த் பிறப்பித்த உத்தரவில் இரு நிறுவனங்களும் பொது நலனை கருத்தில் கொண்டு டெட்ரா-பேக்குகளின் பிரச்சினையை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டார். இது மிகவும் தீவிரமானது என்று கூறினார்.


