ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டித்துள்ளது. செப். 10ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை(TET) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதற்கான தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புவோர் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் முடிவடைய இருந்தது. ஆனால் ஏராளமானோர் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இணையதளம் முடங்கியது.
சமீபத்தில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. தமிழகத்தில் தற்போது சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி அடையாமல் இருக்கின்றனர்.
இன்றைய நிலவரப்படி சுமார் 3.5 லட்சம் பேர் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், இணையதளம் முடங்கியதால் ஏராளமானோர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள், அதாவது வரும் 10-ந்தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.