சென்னை: ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுத தடையில்லாச் சான்று பெற வேண்டிய அவசியமில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் இருக்கிறது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை மேற்கொண்டது. தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளும் கேட்டுப்பெறப்பட்டன. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே நடப்பாண்டுக்கான டெட் தேர்வு நவம்பர் 15, 16ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வெழுத 4.8 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக பணியிலுள்ள ஆசிரியர்களில் பலர் இந்த முறை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அரசுப் பணியில் இருப்பவர்கள் உயர்கல்வி அல்லது வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க துறை சார்ந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும்.
இதனால் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் பலர் தேர்வெழுத அனுமதி கோரி முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் டெட் தேர்வெழுத ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெற வேண்டிய தேவையில்லை. இந்த தகவலை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.