மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 669 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து ஆடிய இந்தியா 2வது இன்னிங்சில் 63 ஓவரின் போது 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கடந்த 23ம் தேதி, மான்செஸ்டரில் துவங்கிய 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி, 358 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன் எடுத்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 77 ரன், டாவ்சன் 21 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று, 4ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் லியாம் டாவ்சன் 26 ரன்னில் அவுட்டானார். அதன் பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோக்ஸ், 198 பந்துகளில், 3 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 141 ரன் குவித்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
சிறிது நேரத்தில் பிரைடன் கார்ஸ் (47 ரன்) அவுட்டாக, 669 ரன்னுடன் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதனால், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன் முன்னிலை பெற்றது. இந்தியா தரப்பில், ஜடேஜா 4, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா தலா 2, அன்சுல் கம்போஜ், முகம்மது சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர், 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் பின் வந்த சாய் சுதர்சனும் ரன் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதையடுத்து, மற்றொரு துவக்க வீரர் கே.எல்.ராகுலுடன் இணை சேர்ந்து கேப்டன் சுப்மன் கில் ஆடத் துவங்கினார். அவர்கள் இருவரும் நிதானமாகவும், பொறுப்பாகவும் ஆடி ரன்களை சேர்த்தனர். 63ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.ராகுல் 87 ரன்னுடனும்,சுப்மன் கில் 78 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.